ARTICLE AD BOX
சென்னை: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 40 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் 2ம்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2ம் கட்ட திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் தற்போது வரை 40 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 128 ரயில் நிலையங்களுடன் 3 வழித்தடங்களில் மேம்பாலம் மற்றும் சுரங்கம் என இரு பிரிவுகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. 50.5 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளில் சுமார் 19 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான 9 கிலோ மீட்டர் நீளமுள்ள மேம்பாலப் பகுதியாகும். பூந்தமல்லி – போரூர் பாதை இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளில் நிலையங்கள் மற்றும் தண்டவாளப் பணிகள் உடனுக்குடன் நடந்து வருகிறது. ஆனால் நிலத்தடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முடிவடைய கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன்படி 2ம் கட்ட திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 40 சதவீதம் பணிகள் நிறைவு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.