ARTICLE AD BOX
மனித மூளை பற்றிய ஆராய்ச்சியில் அவ்வப்பொழுது நமக்குக் கிடைக்கும் தகவல்கள் நம்மை மலைக்க வைக்கின்றன.
ஒரு தகவலை அடுத்து வரும் இன்னொரு தகவல் முந்தைய தகவலைப் புறம் தள்ளி இன்னும் அதிகமாக பிரமிக்க வைக்கிறது.
எடுத்துக்காட்டாக மூளையில் எத்தனை செல்கள் உள்ளன என்பதைக் கணக்கிட்ட விஞ்ஞானிகள் 14 கோடி என்று எண்ணிக்கையைத் 'துல்லியமாகக்' கூறினர்.
அடேயப்பா என்று பிரமித்தோம்.
அடுத்து இப்போது 86 பில்லியன் அதாவது 8600 கோடி நியூரான்கள் மூளையில் உள்ளன என்ற தகவல் வந்தது. பூமியில் உள்ள மனிதர்களை விட பல மடங்கு அதிகம் இது என்று கணக்கிட்டு அடேயப்பா என்று இன்னும் பிரமித்தோம்.
இப்போதோ கோடானு கோடி நியூரான்கள் உள்ளன. ஒவ்வொன்றும் செயல்பாடுடையது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை எதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்று திகைக்கிறோம்!
புதிதாகப் பிறந்த குழந்தைக்கே 100 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்) நியூரான்கள் இருக்கிறதென்றும் ஒரு நிமிடத்திற்கு இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம் நரம்பு செல்கள் என்ற விகிதத்தில் அது சாதாரணமாக வளர்ச்சி அடையும் என்றும் தெரியவருகிறது.
இதைப் பற்றிய விஞ்ஞானக் கட்டுரைகள் மூளை மாடலை வைத்து விளக்குகின்றன!
மூளையின் பகுதிகள் ஒவ்வொன்றும் ஒரு அதிசயமே. இடது பக்க மூளை வலது பக்க மூளை என்று பலகாலமாக சொல்லப்பட்டு வந்த அதிசயங்கள் ஒரு பக்கம்! ஃப்ரண்டல் லோப் மற்றும் கார்டெக்ஸ் எனப்படும் புறணி உள்ளிட்ட மூளை அதிசயங்கள் இன்னொரு பக்கம்.
FRONTAL LOBE (ஃப்ரண்டல் லோப்) எனப்படும் மூளையின் முன் மடலைப் பற்றிய ஆராய்ச்சியை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உடலியல் வல்லுநரான டெல்காடோ (Physiologist DELGADO) என்பவர் அவரது நோயாளியிடம் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று தன்னருகில் இருந்த ஒரு பட்டனை அமுக்கினார்.
எதிரில் இருந்தவரிடம் அவ்வளவாக வீரியம் இல்லாத ஒரு மின்சக்தி, அவரது மூளை முன்மடலில் பாய்ந்தது.
பேசிக்கொண்டே இருந்தவர் திடிரென்று ஒரு வார்த்தை சொல்லும்போதே பாதியில் பேச்சை நிறுத்தினார். அப்படியே செயலற்று இருந்தார்.
டெல்காடோ மின்சக்தியை நிறுத்தினார்.
அவரை நோக்கி, “எப்படி உணர்கிறீர்கள்?” என்றார்.
“எனது மூளை செயலற்று நின்றுவிட்டதைப் போல உணர்ந்தேன். மதுவைக் குடித்தால் போதைமயக்கம் வருமே அதுபோலத்தான் இருந்தது,” என்றார்.
ஃப்ரண்டல் லோப் - மூளையின் உள்ளே உள்ள குட்டி மூளை செய்யும் அற்புதம் இது.
மிருகங்களில் பலவற்றிற்கு இந்த உறுப்பே கிடையாது.
இதற்கும், கார்டெக்ஸ் எனப்படும் புறணிக்கும் (மூளையின் மேல் உறைக்கும்- CORTEX) நிறையத் தொடர்புகள் உண்டு.
இதை ஆராய அனோகின் (Anokhin) என்ற மூளையியல் பேராசிரியரும் அவருக்கு உதவி செய்த பெண்மணியான டாக்டர் நினா ஷுமிலினா (Dr. Nina Shumilina) என்பவரும் பல ஆராய்ச்சிகளை நாய்கள் மீது செய்தனர்.
முதல் மாடியிலிருந்து ஜன்னல் வழியே ஒரு பிஸ்கட்டைத் தூக்கி எறிந்த போது அதைப் பார்த்த நாய் அறையின் கதவு இருக்கும் வழியாக வெளியே வந்து படிகள் வழியே இறங்கித் தோட்டத்திற்குச் சென்று சரியாக அந்த பிஸ்கட்டைக் கண்டுபிடித்து வாயில் கவ்விக் கொண்டு சந்தோஷமாக வந்தது.
இது நாயின் மூளைச் செயல்பாட்டைக் காண்பிக்கும் ஒரு நிகழ்ச்சி.
ஆனால் நினா, தான் வளர்த்த ஏழு நாய்களின் மூளை மடல்களையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றினார். Frontal Lokbectomy எனப்படும் இந்த ஆபரேஷனுக்குப் பின்னர் நடந்தது என்ன?
நாய்களின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டபோது ஓடி வரும் அவைகள், இப்போது சோம்பேறித்தனமாக தலையை உயர்த்தின.
உணவுத் துண்டுகளைத் தூக்கி எறிந்த போது ஒன்று விடாது பொறுக்கித் தின்னும் அந்த நாய்கள் எதிரில் அதன் பார்வையில் இருந்த ஒரு துண்டை மட்டுமே எடுத்துக் கொண்டன.
இப்படி ஒவ்வொரு செயல்பாட்டிலும் மாறுதலைக் கண்டார் நினா.
மூளையின் முன்மடல் எவ்வளவு முக்கியம் என்பதை அவரது ஆராய்ச்சிகள் உறுதிப் படுத்தின.
இந்த ஆய்வுகள் மேம்படுத்தப்பட்டு இப்போது மனித மூளையின் முன்மடலை ஆக்கபூர்வமாக இயங்க வைக்க வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றைச் செய்வது சுலபம் தான்!
விஞ்ஞானிகள் பரிந்துரைக்கும் வழிகள்:-
1) வார்த்தை விளையாட்டுகளை விளையாடுங்கள். வார்த்தை புதிர் போன்றவை – எதானாலும் சரிதான்!
2) மூளைக்கான குறுக்கெழுத்துப் போட்டி, மற்றும் ப்ரெய்ன் கேம்ஸ் - மூளை விளையாட்டுகளை - விளையாடுங்கள்.
3) ஒரு புதிய சமையல் ரெசிபியை செய்து பாருங்கள்.
4) உடற்பயிற்சியை மறக்காமல் தினம் தோறும் செய்யுங்கள். நடைப்பயிற்சி சாலச் சிறந்தது.
5) தியானம் அவசியம்.
6) சரியான தூக்கம் அன்றாடம் தேவை.
7) உணவில் பீட்ரூட் சேர்க்க வேண்டும். அதில் நைட்ரேட் உள்ளது. அது இரத்த நாளங்களை விரிவாக்க உதவும்.
8) இவற்றோடு சமூக சேவை செய்வது மூளையை ஊக்குவிக்கிறது என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மூளையின் முன்மடல் நன்கு இயங்கினால் நமக்கு வெற்றி தான்!