ARTICLE AD BOX
நாம் எல்லோரும் மாறுபட்ட சிந்தனைகளும், கருத்துக்களும் உடையவர்கள். அனைவரையும் ஒருங்கிணைத்து பணியாற்றச் செய்வதற்கு தனித்திறமை வேண்டும். இத்தகு முரண்பாடுகள் தோன்றும் பட்சத்தில் அதை எப்படி திறமையுடன் கையாளுவது, தீர்வு காண்பது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
முரண்பாடுகளுக்குத் தீர்வுகாண முக்கியமான வழி என்னவெனில், எந்த முரண்பாடும் தோன்றாமல் பார்த்துக் கொள்வதுதான் என்று கூறலாம். ஒரு பணியை ஆரம்பிக்கும்போதே சரியான திட்டமிடல், யார் எந்த பணியை எந்தக் காலம் வரைக்கும் செய்து முடிக்க வேண்டும் என்று தெளிவாக வரையறுப்பது, அப்பணி பற்றிய முக்கியத்துவம் பற்றி அறிந்து எல்லோரும் சிறப்பாக பணியாற்றினால்தான் குழு வெற்றிகரமாக அப்பணியை முடிக்க முடியும்.
அதனால் குழுவின் வெற்றியைப் பொறுத்தே தனி நபர் வெற்றியும் அமைந்திருக்கிறது என்பதை ஒவ்வொருவரது மனதிலும் ஆழமாக பணிய வைத்தல் மூலம் அவர்களை இப்பணியில் முழுமையாக ஈடுபாட்டுடன் செயலாற்ற வைக்கமுடியும். முரண்பாடுகளையும் தவிர்க்க முடியும்.
இருவருக்கிடையேயான முரண்பாட்டைத் தீர்த்து வைக்கும்போது ஒரு விஷயத்தை நன்கு ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். அத்தீர்வு இருவருமே திருப்திபடும் வகையில் இருக்கவேண்டும். ஒருவர் வெற்றிபெற்ற தாகவும், மற்றவர் தோல்வியுற்ற தாகவும் நினைத்து விடக்கூடாது. அது தொடர்ந்து பல பிரச்னைகள் தோன்றக் காரணமாகிவிடும்.
முரண்பாடு கொண்ட இருதரப்பினரை முதலில் தனித்தனியே அழைத்துப்பேசி முரண்பாட்டின் அடிப்படைக் காரணத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். பின் இரண்டு தரப்பினரையும் அழைத்து இருவரையும் ஏதாவது ஒரு விஷயத்தில் விட்டுக் கொடுக்கு மாறு செய்யவேண்டும். இருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பொதுவான விஷயத்தை அடிப்படையாகக்கொண்டு இந்தப் பேச்சு வார்த்தை நடைபெறலாம்.
முரண்பாடு உங்களுக்கும் வேறொரு நபருக்கும் எனும் பட்சத்தில் பிரச்னையில் சம்பந்தப்படாத வேறொரு நபரை அழைத்து உங்கள் முரண்பாட்டைத் தீர்த்து வைக்கச் சொல்லலாம். இந்த நபர் உங்கள் இருவரின் நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் உரியவராக இருக்க வேண்டும். அவர் சொல்படி நடப்பதென்ன தீர்மானத்தை அந்த இருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இப்படித்தான் செயல்படுத்த வேண்டும் என்றும், இதில் இதுதான் தன்பங்கு என்றும் ஒரு புரிதல் இருக்க வேண்டும். இவற்றில் ஏற்படும் முரண்பாடுகளே ஒருவருக்கொருவர் முரண்படும் காரணமாகி விடுகிறது.
ஒரு முரண்பாடு தோன்றும் போது முரண்பட்ட அந்த நபர்களை அழைத்து அப்பணி பற்றிய அவர்களது எண்ணங்களை, புரிதல்களைப் பேசச் செய்ய வேண்டும். பிறகு அந்தப் பணியின் இலக்கு, குழுவின் இலட்சியம் இவற்றைத் தெளிவாக அவர்களுக்கு விளக்கி தங்கள் புரிதல்களில் உள்ள வேறுபாடுகளை முடிந்தவரை போக்கி ஒரு பொதுவான அல்லது ஒன்றிணைந்த கருத்தினை உருவாக்குவதன் மூலம் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பும் தந்து குழுவாக ,சிறப்பாக இயக்கச் செய்ய முடியும்.
இதுபோல் பணியின் இலக்கை அடிப்படையாகக் கொண்டு தனித்தனி கருத்துக்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய கருத்தை உருவாக்குவதன் மூலம் செய்ய வேண்டிய பணி முன்னுக்கும், தனிநபர் கருத்துக்கள், வேறுபாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது.
மனதில் வைக்க வேண்டிய சில விஷயங்கள்.
ஒரு முரண்பாடு தோன்றிவிடும்போது அதற்குத் தீர்வு காணும் நபர் எக்காரணம் கொண்டும் இந்த முரண்பாட்டுக்கு நீதான் காரணம் என்று ஒரு நபரைக் குற்றம் சாட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.
"நீ இப்படி முட்டாள்தனமாக செய்திருக்கக் கூடாது.
இது உன் திறனின்மையையே காட்டுகிறது
போன்ற விதத்தில் எடுத்தவுடன் குற்றம் சாட்டாமல், முதலில் அந்த நபரை சுதந்திரமாக மனந்திறந்து பேசவைத்து பின் அவர் செயலில் ஏதேனும் குறையிருப்பதாகத் தோன்றுமானால் அதை அவரே உணரும்படி செய்ய வேண்டும்.