மும்மொழிக் கொள்கையும் இந்தித் திணிப்பும்!!

4 days ago
ARTICLE AD BOX

மொழி என்பது உணர்வுகளையும், கருத்துக்களையும் பரிமாறுவதற்கான ஊடகம். மனிதன் பேசத்தொடங்கிய காலம் முதல் பல்வேறு மொழிகள் உலகில் தோன்றியுள்ளன.நீண்டகாலமாக வழக்கில் இருக்கும் மொழி இலக்க்கிய இலக்கணச் செறிவடைந்து ஆழமான மொழியாக அந்த மொழி சார்ந்த மக்களின் வாழ்வியலை பறைசாற்றுகிறது. அப்படிப்பட்ட மொழிகளையே செவ்வியல் மொழி என அடையாளம் காணப்பட்டு செம்மொழி என்று அழைக்கப்படுகிறது.  தமிழ் மொழியும் உலகின் செம்மொழிகளில் ஒன்றாகும்

ஒரு மொழி அடுத்தடுத்த தலைமுறை குழந்தைகளால் எழுதப்பட்டு, பேசப்பட்டு வழக்கத்தில் இருந்தால் தான் நீடித்து நிலைக்கும். தமிழ் மொழி சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டுள்ளது. இன்றளவும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளிலும் எழுத்து, பேச்சு வழக்கத்தில் உள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு தமிழ் மொழி நீடித்தி நிலைத்து நிற்கிறது ஆங்கிலேய கல்வி முறை வந்த பிறகு தமிழ் மொழி கற்றலும் காலத்திற்குத் தகுந்தாற் போல் மாற்றம் அடைந்துள்ளது. இன்றைய தமிழ்நாட்டு பாடநூல் திட்டத்தின் முதலாம் வகுப்பு தமிழ் மொழி புத்தகத்தில் க்யூஆர் கோட் அச்சிடப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்தால், புத்தகத்தில் உள்ள பாட்டு ஒலி ஒளி வடிவத்தில் செல்போனில் ஒலிக்கிறது. இத்தகைய நவீன வடிவத்தில் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்றுத் தரப்படுகிறது.

இந்த நிலையில், மும்மொழிக் கொள்கை என்ற அடிப்படையில் மூன்றாவது ஒரு மொழியை கட்டாயமாகத் துடிக்கிறது ஒன்றிய அரசு. மூன்றாவது மொழியை கட்டாயமாக்கினால் தான் கல்விக்கு நிதி தரப்படும் என்று ஒன்றிய அமைச்சர் வெளிப்படையாகத் தெரிவிக்கிறார். ஏன் அவ்வளவு கட்டாயமாக மூன்றாவது ஒரு மொழியை திணிக்க முயல்கிறார்கள். அது எந்த மொழி? இந்தி என்று நேரடியாகச் சொன்னால் தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு என்பதால் மூன்றாவது மொழி என்ற பாதையில் வருகிறார்கள்.

இருக்கட்டும். முதலில் இந்தி மொழி குறித்த சில விவரங்களைப் பார்ப்போம். இந்தி மொழியின் யின் எழுத்து ‘தேவநாகிரி’ வடிவமாகும். மராட்டி, குஜராத்தி, குர்முர்கி (பஞ்சாபி) ஹரியான்வி,மாரவாரி என அனைத்து வட இந்திய மொழிகளும் தேவநாகிரி வடிவத்தைச் சாரந்தவையே ஆகும். அஸ்ஸாமிஸ் மற்றும பெங்காலியும் தேவநாகிரியின் வடிவத்தைச் சாரந்தவைகள் தான். அதனால் வடக்கே உள்ள  பிற மொழிக்காரர்களுக்கும் இந்தி படிப்பது எளிதானதாகும்..

தமிழ் மொழி தனி எழுத்து வடிவம் கொண்டது. தேவநாகிரி என்பது நமக்கு புதியது. எதற்காக தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட நம் குழந்தைகள் சிறு வயதில் இந்தி மொழியை கற்க வேண்டும்? தமிழ், ஆங்கில எழுத்துக்களுடன் மூன்றாவ்தாக ஒரு புதிய எழுத்து வடிவத்தில் பயில்வதில் என்ன பயன் கிடைக்கப் போகிறது என்பதை சிந்திக்க வேண்டுமல்லவா? 

சில அடிப்படை இலக்கணங்களை தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பார்ப்போம்.

தமிழ் மொழியில் ஆண், பெண் இருவரும் “ நான் செல்கிறேன்” என்று சொல்கிறார்கள்.

ஆங்கில மொழியிலும் ஆண், பெண் இருவரும் “ I go"  என்றே சொல்கிறார்கள்.

ஆனால் இந்தியில் ஆண் “ நான் செல்கிறேன்” என்றும் பெண் “நான் செல்கிறேள்” என்றும் சொல்ல வேண்டியதுள்ளது.

ஆங்கிலமும் தமிழும் ஒரே விதமான இலக்கணத்தைக் கொண்டுள்ளதை மேலே சொன்ன உதாரணத்தில் பார்க்க முடிகிறதல்லவா. ஆக, எழுத்து வடிவம் மட்டுமல்லாம இந்தியில் இலக்கணமும் மாறுபட்டதாக இருக்கிறது. இப்படி நமக்கு முற்றிலும் முரண்பட்ட ஒரு மொழியை நம் குழந்தைகள் ஏன் கற்றாக வேண்டும்? அதனால் என்ன பயன்கள்?

மாறி வரும் தொழில்நுட்ப உலகத்தில் இளமையில் கற்றுக் கொள்ள வேண்டிய அறிவியல் சார்ந்த ஆயிரக்கணக்கான புதிய தேவைகள் வந்து கொண்டே இருக்கிறது. அதைக் கற்றுக்கொள்ளவே நம் குழந்தைகளின் நேரம் போதுமானதாக இல்லை. அப்படி இருக்கையில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எந்தப் பயனும் தராத,  தேவையில்லாத ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவது நியாயமாகுமா? 

இந்தக்காலத்தில் வேலை தேடி  வடக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை. கடந்த தலைமுறையில் மும்பை, டெல்லி  சென்றவர்கள் எல்லாம் ஒரே மாதத்தில் இந்தியை கற்றுக்கொண்டார்கள். இப்போது வட நாட்டவர்கள் தான் தெற்கு நோக்கி வேலைக்காக வருகிறார்கள். அங்கே மும்மொழிக் கொள்கை என்றால், இங்கே வேலைக்கு வரும் வடநாட்டுத் தொழிலாள நண்பர்களுக்கு இந்தி தவிர மற்ற இரண்டு மொழிகள் எதுவும் தெரிவதில்லையே ஏன்? மும்மொழிக் கொள்கை என்பது தென்னாட்டு மாநிலங்களுக்கு மட்டும் தானா?

மும்மொழிக் கொள்கை என்ற வடிவத்தில் வரும் இந்தித்திணிப்பு என்பது தமிழ் மொழியை சீர்குலைக்க வரும் நீண்டகாலத் திட்டம். இந்தி மொழியால் பாதிக்கப்பட்ட மராட்டி, கன்னட மொழிக்காரர்களைக் கேட்டால் விவரமாகச் சொல்லுவார்கள். நூறாண்டுகளுக்கு முன்பே விழித்துக்கொண்ட தமிழினத்தால் தமிழ் மொழி பிழைத்துக் கொண்டுள்ளது. தமிழ் மொழி தமிழர்களின் உணர்வோடு ஒன்றிணைந்துள்ளது.

பன்மொழிகளின் உறைவிடமாக பல இனங்களின் ஒற்றுமைச் சிகரமாக விளங்கிடும் ஒரே நாட்டின் எல்லா மொழிகளும் நீடூழி வாழ,  பன்முக அடையாளம் கொண்ட இந்தியத் திருநாட்டை ஒரு மொழி மயமாக்கும் இந்தித்திணிப்பை அனைவரும் உளமாற எதிர்ப்போம்.

- ரத்ன பிரபாகர்

Read Entire Article