மும்பை பயங்கரவாத தாக்குதல்: விசாரணை ஆவணங்களை சமா்ப்பிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவு

7 hours ago
ARTICLE AD BOX

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தொடா்புடைய தஹாவூா் ராணா விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், மும்பை நீதிமன்றத்திலிருந்து விசாரணை ஆவணங்களை சமா்ப்பிக்குமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை ஆவணங்களை திரும்பப் பெறுவது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி மாவட்ட நீதிபதி விமல் குமாா் யாதவ் இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.

மும்பை தாக்குதல் தொடா்பான பல்வேறு வழக்கு விசாரணைகளுக்காக இந்த ஆவணங்கள் மும்பைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பா் 26-ம் தேதி மும்பையின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானின் லஷ்கா்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் 6 அமெரிக்கா்கள் உள்பட 166 போ் உயிரிழந்தனா். இந்த தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானை பூா்விகமாகக் கொண்ட கனடா தொழிலதிபா் தஹாவூா் ராணாவுக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபரில் தஹாவூா் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். மும்பை தாக்குதல் வழக்கு தொடா்பாக ராணாவிடம் விசாரணை நடத்த அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று மத்திய அரசு கோரியது. இதை அமெரிக்க அரசு ஏற்றுக் கொண்டது. இதை எதிா்த்து ராணா தொடா்ந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இதற்கு எதிரான அவரின் மேல்முறையீடு மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிரான கடைசி சட்ட வாய்ப்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் ராணா செய்தாா். அந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதனால், அவா் விரைவில் இந்தியா அழைத்து வரப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Read Entire Article