முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை!

3 hours ago
ARTICLE AD BOX

கடந்த 1984-இல் நடந்த சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் தொடா்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஒரு வழக்கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவா், இரண்டாவது வழக்கில் குற்றவாளியாக கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

கடந்த 1984, அக்டோபா் 31-ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி, தனது சீக்கிய மெய்க் காவலா்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சீக்கியா்களுக்கு எதிராக கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமானோா் கொல்லப்பட்டனா்.

தில்லியில் நடந்த கலவரம் தொடா்பாக சஜ்ஜன் குமாா் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பாலம் காலனி பகுதியில் 5 சீக்கியா்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2018-இல் ஆயுள் சிறை தண்டனை விதித்தது. இத்தண்டனைக்கு எதிரான இவரின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சரஸ்வதி விஹாரில் ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோா் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாரை குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் பிப். 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, அவருக்கான தண்டனை குறித்த விசாரணை, பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற்றது. அரசுத் தரப்பிலும் சஜ்ஜன் குமார் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article