ARTICLE AD BOX
முதுமை வந்தாலும், நம்மில் பெரும்பாலோர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ விரும்புகிறோம். கூடவே தவிர்க்க முடியாத இறப்பும் வலியில்லாமல் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.
ஜப்பானியர்கள்தான் உலகிலேயே அதிக ஆயுட்காலம் வாழ்பவர்கள். உலக சுகாதார புள்ளி விவரப்படி ஜப்பானியர்களின் சராசரி ஆயுட்காலம் 83.7 ஆண்டுகள். இவர்களில் பெண்களுக்கு 86.8 வயதும், ஆண்களுக்கு 80.5 வயதும் சராசரி ஆயுட்காலம் ஆகும். இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 69.16 ஆண்டுகள் ஆகும்.
மத்திய ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் 112 வயது 344 நாட்கள் வாழ்ந்து கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளாக கூறப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, கலாச்சாரம், மரபியல் போன்றவை இதற்கு முக்கியக் காரணங்களாக கருதப்படுகின்றன.
ஜப்பானியர்கள் சரியான உணவை சரியான நேரத்தில் சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். வயிற்றில் 80 சதவீதம் நிரம்பும் வரை மட்டும் சாப்பிட்டால் நீண்ட காலம் வாழலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் உணவை நன்கு மென்று சாப்பிடும் முறையையும் ஊக்குவிக்கிறார்கள்.
ஜப்பானில் சிறு குழந்தைகளுக்கு கட்டாய தடுப்பூசி திட்டம் உள்ளது. மக்களின் உடல்நிலையை அவ்வப்போது அறிந்து கொள்ள சுகாதார நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இவை தவிர, அவர்கள் அதிக அளவிலான தூய்மையைப் பின்பற்றுகிறார்கள்.
உட்கார்ந்த வாழ்க்கை முறையை தவிர்க்கிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடுமானவரை நடக்கவே விரும்புகிறார்கள். அங்கு மக்களின் உடல் பருமன் மிகவும் குறைவாக இருப்பதற்கு காரணம் இந்த உணவுப் பழக்கமும் உடற்பயிற்சியும்தான்.
அவர்கள் பின்பற்றும் ‘இகிகை’ கொள்கை, அவர்கள் ஏன் வாழ்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. வாழ்க்கையில் ஒரு இலக்கை நிர்ணயிப்பது, மற்றவர்களுக்கு உதவுவது, சரிவிகித உணவு உண்பது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அன்பாக நேரத்தை செலவிடுவது போன்றவை அவர்களின் ஆயுட்காலத்தை இரட்டிப்பாக்குகிறது.
ஜப்பானியர்கள் தங்கள் வயதான குடும்ப உறுப்பினர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதில்லை. குடும்ப உறுப்பினர்களை நன்கு கவனிப்பது அவர்களின் பாரம்பரிய ரகசியம். முதுமையில் குடும்பத்துடன் வாழ்வது உளவியல் ரீதியாக பல நன்மைகளைத் தருவதாகவும், அவர்கள் நம்புகிறார்கள்.
முதுமையில் நாம் நிலையற்ற நிகழ்வுகளால் விரக்தியடையவோ, பொறுமையிழக்கவோ கூடாது. வாழ்க்கை மிகவும் நீண்டது. நமக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், நாம் வருந்திய காரியங்களை செய்திருந்தாலும், தவறு செய்திருந்தாலும், நமக்கு பிரகாசமான எதிர்காலம் இன்னும் நம் முன்னால் உள்ளது. நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கும் வரை, நித்திய இளமையுடன் இருக்க முடியும். இது நம் இளமையை வாழ்நாள் முழுவதும் நீட்டிக்க உதவும்.
நமது மனஇளமை நாம் வாழ்வதில் காட்டும் ஆர்வம், புதியனவற்றை கற்றுக் கொள்வதில் காட்டும் உற்சாகம், நமது வாழ்வின் இலக்குகளை அடைவதில் காட்டும் முயற்சி, மனம் மற்றும் உடல், ஆற்றல் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.
ஜப்பானில் முதுமை கொண்டாடப்படுகிறது. முதுமையை நினைத்து யாரும் கவலைப்படுவதுமில்லை. எந்தவொரு சமூகத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கும் முதியவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதும், அவற்றை பொக்கிஷமாக கருதுவதும் மிகவும் அவசியம். வயதாகும்போது அதிக சுறுசுறுப்பும், பரந்த மனப்பான்மையும், சகிப்புத்தன்மையும், அதிக சுதந்திரமும் மன உறுதியுடன் வாழும் உணர்வும் முக்கியம்.
உணவை ஒரே தட்டில் சாப்பிடுவதை விட சிறிய தட்டுகள் அல்லது கிண்ணங்களில் சாப்பிடுவது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் பழக்கதை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சாப்பிடும்போது தொலைக்காட்சியை பார்ப்பதையும், கைப்பேசி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். தரையில் அமர்ந்து உணவை சாப்பிடுவது நல்லது.
நாம் சமச்சீரான உணவை உண்ணவேண்டும். பழங்கள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், அரிசி, முழு தானியங்கள், சோயா, மற்றும் பச்சை காய்கறிகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் உட்பட அனைவரும் அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து அல்லது சைக்கிளில் செல்லும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நாம் ஜப்பானியர்களின் வாழ்வியலை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வாழமுயற்சிக்க வேண்டும்.