ARTICLE AD BOX
Published : 20 Mar 2025 04:07 PM
Last Updated : 20 Mar 2025 04:07 PM
‘முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம்’ - பயனாளிகள் தேர்வுக்கு வழிகாட்டுதல்கள் என்னென்ன?

சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்துக்கு,‘முதல்வரின் வீடுகள் மறு கட்டுமானத்திட்டம்’ என பெயரிடப்பட்டு, இந்த ஆண்டுக்கு முதல் கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 14-ம் தேதி தமிழக அரசின் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், பல்வேறு அரசுத்திட்டங்களின் கீழ் கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன் ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களுக்காக கட்டப்பட்டு தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடுகளை கட்டித்தர அரசு முடிவெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் புதிய வீடுகள் ரூ.600 கோடி மதிப்பில் கட்டித்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம்’ என்ற பெயரின் கீழ், வழிகாட்டுதல்களுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஊரகவளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
இந்த 2024-25 மற்றும் வரும் 2025-26 ஆகிய ஆண்டுகளுக்கு ஊரகப்பகுதிகளில் அரசால் கட்டப்பட்டு பழுதடைந்த 2.57 லட்சம் வீடுகளை பழுதுபார்க்க ரூ.1954.20 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில், 2024-25ம் ஆண்டுக்கு 1.48 லட்சம் வீடுகளை பழுதுபார்க்க ரூ.1041.32 கோடிக்கு நிதி ஒப்புதல் தரப்பட்டது. அதன்பின், கடந்தாண்டு, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அரசுக்கு எழுதிய கடிதத்தில், 2000-01ம் ஆண்டில் ஊரக வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளைில் பழுது பார்க்க கூடுதல் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், கடந்த மார்ச் 14-ம் தேதி தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர், 25 ஆயிரம் வீடுகள் ரூ.600 கோடியில் கட்டித்தரப்படும் என அறிவித்தார்.
ஏற்கெனவே பழுதுபார்க்க எடுத்துக் கொள்ளப்பட்ட வீடுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பழுதுபார்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பழுது பார்க்க இயலாத வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டித்தர பயனாளிகளிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டிருந்தன. இவற்றின் அடிப்படையில், முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் என்ற புதிய திட்டத்தை 2025-26ம் ஆண்டில் செயல்படுத்தி, அதன்படி, பழுதுபார்க்க இயலாத வீடுகளுக்கு பதில், 210 சதுரடி பரப்பில் ரூ.2.40 லட்சம் செலவில் புதிய வீடுகள் கட்டவும், வீட்டுக்கான செலவு தவிர்த்து, 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளிகளுக்கு 90 மனித நாட்கள் வழங்கவும் ஊரகவளர்ச்சித்துறை ஆணையர் தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கினார். இதை ஏற்று இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.600 கோடிக்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. தொடர்ந்து, இதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது.
வழிகாட்டுதல்கள்: > கிராமப்புறங்களில் 2000-2001ம் ஆண்டு வரை பல்வேறு அரசு திட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளை பழுது நீக்கம்செய்ய, ஊரக வளர்ச்சித்துறை மேற்கொண்ட கணக்கெடுப்பு இத்திட்டத்துக்கான அடிப்படையாக இருக்கும்.
பழுதுபார்க்க இயலாத நிலையில் உள்ள ஓடுகள், சாய்தள காான்கிரீட் கூரை கொண்ட வீடுகள் இத்திட்டத்தில் தகுதியானவை.
> மறு கட்டுமான வீடு , பயனாளியின் பெயரில் அரசு திட்டத்தில் ஒதுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
> பயனாளி இறந்திருந்தால், சட்டப்பூர்வ வாரிசுகள் குடியிருந்தால் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும்.
> சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சாரா நிறுவனங்களால் கட்டப்பட்டு வழங்கப்பட்ட வீடுகளும் சிறப்பினமாக எடுத்துக் கொள்ளப்படும்.
> பயனாளி, இந்த வீட்டைத் தவிர வேறு எந்த வீட்டையும் சொந்தமாக வைத்திருக்கக்கூடாது, விற்கப்பட்ட, வாடகைக்கு விடப்பட்ட மற்றும் சட்டப்பூர்வமற்ற வாரிசுகள் குடியிருந்தால் திட்டத்தில் எடுக்கப்படாது.
> ஓய்வு பெற்ற, பணிபுரியும் அரசு ஊழியர்களுக்குசொந்தமான, அவர்கள் வாழ்க்கைத்துணையின் வீடுகள் எடுக்கப்படாது.
> பயனாளியின் தகுதியை மதிப்பிட, வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சி அளவில், கிராம ஊராட்சி தலைவர் அல்லது தனி அலுவலர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.
> இக்குழு வீடுகளை கூட்டாக ஆய்வு செய்து பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும்.
> ஊரக வளர்ச்சி ஆணையரால், மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெறப்படும் கருத்துருக்கள் அடிப்படையில் மாவட்டம், வட்டாரம், கிராம ஊராட்சி வாரியாக வீடுகளுக்கான இலக்கு நிர்ணயிக்கப்படும்.
> முழுமையாக சேதமடைந்த பழுது பார்க்க இயலாத வீடுகளை ரூ.2.40 லட்சம் செலவில், 210 சதுரடி பரப்பில் புதிதாக கட்டலாம். பயனாளிகள் விருப்பப்படி மறு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டால், கூடுதல் செலவை பயனாளிகளே ஏற்க வேண்டும்.
> வீடுகளின் சுவர்கள் செங்கற்கள், நிலக்கரி சாம்பல் கலந்த கற்கள், சிமென்ட் கான்கிரீட், இன்டர் லாக்கிங் கற்கள் கொண்டு, சிமென்ட் சாந்து பயன்படுத்தி சட்டக அமைப்புடன் கட்ட வேண்டும்.
மண் சாந்து பயன்படுத்தக்கூடாது.
> செலவு குறைந்த தொழில்நுட்பங்கள், விரைவான கட்டுமான முறை அனுமதிக்கப்படும்.
> பயனாளிகள் வீடு கட்ட தேவையான உதவிகளை கிராம ஊராட்சிகள் வழங்க வேண்டும்.
> அரசு வழங்கும் தொகை பயனாளிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
> வீட்டின் முன்பு, அல்லது சுற்றிலும் இட வசதிக்கேற்ப 6 அடி உயரமுள்ள 2 மரக்கன்றுகள், வேலியுடன் அமைக்கப்பட வேண்டும். அதன் பின்னரே இறுதி தவணைத் தொகை வழங்கப்பட வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை