இன்றைய காலகட்டத்தில், விமானப் பயணம் எளிதாகவும் எவராலும் அணுகக்கூடியதாகவும் மாறியுள்ளது. உலகம் முழுவதும் தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் விமானங்களில் பயணம் செய்கின்றனர். ஆனால், ஒரு நூற்றாண்டிற்கு முன்பு, இது ஒரு சாத்தியமற்ற கனவாகவே இருந்தது. மனிதர்கள் வானில் பறந்து பயணம் செய்வது என்பது அப்போதைய மக்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது.
உலகின் முதல் வணிக பயணிகள் விமானம் 1914 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி புறப்பட்டது. இது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் - தம்பா பே ஏர்போட் லைன் மூலம் இயக்கப்பட்டது. இந்த விமான சேவையை ஆரம்பித்தவர் பெர்சி ஃபேன்ட் என்பவர். விமானத்தை இயக்கியவர் டோனி ஜானஸ்.

இந்த விமானம் 34 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 23 நிமிடங்களில் கடந்து சென்றது. இது ஒரே ஒரு பயணிக்காகவே வடிவமைக்கப்பட்ட விமானமாகும். முதல் பயணியாக அப்ராம் பெய்லி என்பவர் பயணம் செய்தார். இந்த விமானத்திற்கான முதல் பயணச் சீட்டு ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டது. அதன் விலை $400 (அதாவது, அந்தக் காலத்தில் சுமார் ரூ.6000). ஆனால், இன்றைய மதிப்பில் பார்க்கும்போது, இது ரூ.6,02,129 ஆகும். ஆனால், அதன்பிறகு விமான சேவை வழக்கமானதாக மாறியது. அப்போது ஒரு பயணத்திற்கான கட்டணம் வெறும் $5 (இன்று சுமார் ரூ.8,600) மட்டுமே இருந்தது.
இந்த விமானம் 567 கிலோ எடையுடையது. இதை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரயில்மூலம் கொண்டு வரப்பட்டது. விமானத்தின் நீளம் 8 மீட்டர், அகலம் 13 மீட்டர். இது ஒரே ஒரு பயணிக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. வழக்கமான விமானங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது. இன்றைய விமானங்களைப் போல இது மூடியதாக இல்லை. பயணிகள் திறந்த இடத்தில் அமர வேண்டிய கட்டாயம் இருந்தது. எனவே, வானிலே செல்லும் போது காற்றின் வேகம், வெப்பநிலை போன்றவற்றை நேரடியாக உணர வேண்டிய நிலைமை இருந்தது.
1910-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், அமெரிக்காவில் போக்குவரத்துக்கு அதிக பிரச்சனைகள் இருந்தன. குறிப்பாக, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் தம்பா நகரங்களை இணைக்கும் போக்குவரத்து மிகவும் சிரமமாக இருந்தது. இரு நகரங்களுக்கும் இடையே 34 கிலோமீட்டர் மட்டுமே இருந்தாலும், அந்த தூரத்தை கடந்து செல்ல, ரயிலில் அரை நாள் வரை இருக்கலாம். இந்த பிரச்சனையை தீர்க்கவும், வணிகப் பயணிகளுக்கு விரைவான பயண வசதி ஏற்படுத்தவும் இந்த விமான சேவை தொடங்கப்பட்டது.
முதல் பயணத்திற்குப் பிறகு, இந்த விமான சேவை வழக்கமானதாக மாறியது. வாரத்தில் ஆறு நாட்கள், தினமும் இரண்டு முறை விமானங்கள் இயக்கப்பட்டன. சிறிய விமானமாக இருந்ததால், ஒவ்வொரு பயணத்திலும் ஒரே ஒரு பயணிக்கே இடமிருந்தது. முடிவில், சில மாதங்கள் இயங்கிய பிறகு, இந்த சேவை நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு, உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து மெதுவாக வளரத் தொடங்கியது. 1914-ல் வெறும் ஒரு பயணிக்காக தொடங்கப்பட்ட இந்த விமான சேவை, இன்று மிகப்பெரிய தொழில் நுட்ப வளர்ச்சியை அடைந்துள்ளது. இப்போது உலகின் எந்த மூலையிலும் சில மணி நேரங்களில் பயணம் செய்யலாம்.
இன்றைய போயிங் 747, ஏர்பஸ் A380 போன்ற பெரிய விமானங்கள் நூற்றுக்கணக்கான பயணிகளை ஒரே நேரத்தில் அழைத்துச் செல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. இந்த வளர்ச்சி, இன்று நம் வாழ்க்கையில் முக்கிய பங்காக இருக்கிறது. வேகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் இந்த விமானப் போக்குவரத்து, எதிர்காலத்தில் இன்னும் அதிக முன்னேற்றங்களை காணவிருக்கிறது.