ARTICLE AD BOX
ராமநத்தம்,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை கடலூருக்கு சென்றார். பின்னர் அவர், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில் வேப்பூர் அருகே திருப்பெயர் கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நேற்று இரவு நெய்வேலி சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் இன்று காலை 9.30 மணிக்கு திருப்பெயர் கிராமத்திற்கு வருகிறார்.
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் மாநாட்டிற்கு தலைமை தாங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விழாவில் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலி, விழா மலரை வெளியிட்டு, அரசு பள்ளி புதிய கட்டிடங்களை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்து சிறப்புரையாற்ற உள்ளார்.
விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவுக்காக திருப்பெயர் கிராமத்தில் வேப்பூர்-விருத்தாசலம் சாலையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விழாவில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 7 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ள உள்ளதால், அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.