ARTICLE AD BOX
10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் வருகிற 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இந்தத் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு ஐதராபாத்தில் அரங்கேறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, இந்த சீசனில் அந்த அணியை முதல் 3 போட்டிகளுக்கு வழிநடத்தும் கேப்டன்சி பொறுப்பை இளம் வீரர் ரியான் பராக்கிற்கு வழங்கி இருக்கிறது. இந்த திடீர் கேப்டன்சி மாற்றம் எதற்காக என்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் இப்போதுதான் தனது விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வருகிறார். அதனால், முதல் மூன்று போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை ரியான் பராக் அணியிடம் ஒப்படைத்துள்ளார்.
சஞ்சு சாம்சனுக்கு, பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் டி20 தொடரின் போது. காயம் ஏற்பட்டது. விரல் அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு சில நாட்களுக்கு முன்புதான் அவர் அணியில் இணைந்தார். இருப்பினும், சஞ்சு சாம்சனுக்கு விக்கெட் கீப்பிங் மற்றும் பீல்டிங் செய்வதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், அவர் எந்தப் போட்டிகளையும் தவறவிட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராயல்ஸ் அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் சஞ்சு சாம்சன், விக்கெட் கீப்பிங் மற்றும் பீல்டிங்கில் பங்கேற்கும் வரை பேட்டிங்கில் முக்கிய பங்களிப்பாளராக இருப்பார். முழுமையாக குணமடைந்தவுடன் அவர் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்பார்" என்று தெரிவித்துள்ளது.
இளம் வீரர் ரியான் பராக் உள்நாட்டு போட்டிகளில் அசாம் அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவராக இருக்கிறார். அவர் கேப்டனாக இருந்த காலத்தில் தனது திறனை நிரூபித்துள்ளார். அணியின் எதிர்கால கேப்டன்சி பொறுப்பை கருத்தில் கொண்டு அவரைக் கேப்டனாக தெரிவு செய்திருப்பதாக தெரிகிறது.