மீனவர்கள் என்ற போர்வையில் செயல்படும் கடத்தல்காரர்கள்: அண்ணாமலை பேச்சால் சர்ச்சை

14 hours ago
ARTICLE AD BOX

ராமநாதபுரம்: மீனவர்கள் என்ற போர்வையில் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘தமிழக மீனவர் பிரச்னை குறித்து பேசுவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. மார்ச் 10 முதல் 15ம் தேதிக்குள் ஒரு நாள் நாகை, ராமேஸ்வரம், காரைக்கால், புதுச்சேரி மீனவ சங்கத் தலைவர்களை அழைத்துச் சென்று பேச உள்ளோம். இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்ற பிறகே தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. கடுமையான சட்ட திருத்தமும் செய்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர், வெளியுறவு அமைச்சர் இலங்கை அரசுடன் பேசியுள்ளனர். மீனவர் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு, சர்வதேச எல்லைப் பிரச்னையாக பார்க்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். 200 ஆண்டுகளாக மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சில சமூக விரோதிகள் மீனவர் என்ற போர்வையில் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.

அவர்களே பிரச்னையை தூண்டி விடுகின்றனர். கடத்தல்காரர்களை கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இலங்கை அளித்துள்ள விளக்கத்தில் அது வேண்டும் என்றே நடக்கவில்லை. சுட்டவர்கள் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விரைவில் இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தை நடத்தப்படும் .இவ்வாறு அவர் கூறினார்.

மீனவர்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் என்றும், தூண்டி விடுகின்றனர் என்றும் அண்ணாமலை கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது மீனவர்களையும், போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதாக உள்ளதாக, அண்ணாமலை மீது ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

The post மீனவர்கள் என்ற போர்வையில் செயல்படும் கடத்தல்காரர்கள்: அண்ணாமலை பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.

Read Entire Article