ARTICLE AD BOX
மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ரௌத் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வராக பதவியேற்றிருக்கும் தேவேந்திர பட்னவீஸ், தன்னை ஓரம்கட்டிவருவதாக, கடந்த பிப்.22ஆம் தேதி அமித் ஷாவை நேரில் சந்தித்த துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே புகார் கொடுத்திருப்பார்.
அதற்கு, அமித் ஷாவோ, பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுங்கள். பிறகு முதல்வர் பதவியைக் கேளுங்கள் என்று கூறியிருப்பதாக சஞ்சய் ரௌத், சாம்னாவில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஷிண்டேவின் அரசியல் எதிர்காலம் மற்றும் பாஜகவின் உள் மாநில தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்களுக்கு இடையேயான சமநிலை போன்றவை குறித்தும் சாம்னா கேள்வி எழுப்பியிருக்கிறது.
இந்த கூற்றுக்கு, ஷிண்டேவும், மற்றொரு துணை முதல்வருமான அஜித் பவார், இது நகைச்சுவைக்குரியது என்று கருத்துத் தெரிவித்தள்ளனர்.
முன்னாள் முதல்வரும், இன்னாள் துணை முதல்வருமான ஷிண்டேவை ஓரம்கட்டும் பணியை பட்னவீஸ் வெளிப்படையாகவே செய்து வருகிறார். இருவருக்குள்ளும் பனிப்போர் மூண்டிருக்கும் நிலையில், அமித் ஷாவை ஷிண்டே சந்தித்தது, புகார் பட்டியல் வாசிக்கத்தான் என்று கூறப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, தன்னை முதல்வராக்குவதாக வாக்குறுதி அளித்துத்தானே கூட்டணி அமைத்தீர்கள் என்று ஷிண்டே கேட்டிருக்கலாம், அதற்கு, 132 தொகுதிகளை பாஜக வென்றுவிட்டு, வேறு கட்சித்தலைவரை எப்படி முதல்வராக்க முடியும் என்றும், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிட்டு வந்து முதல்வர் பதவியைக் கேளுங்கள் என்றும் அமித் ஷா கூறியிருப்பார் என்றும் அந்த சாம்னா கட்டுரை விவரிக்கிறது.
மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் முறையே கடந்த 2022 மற்றும் 2023, ஜூலையில் இரு அணிகளாகப் பிரிந்தன. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையையும் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸையும் தோ்தல் ஆணையம் அங்கீகரித்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில், இவ்விரு கட்சிகளுடன் இணைந்து பாஜக தோ்தலைச் சந்தித்தது. தோ்தல் முடிவில், பாஜக கூட்டணி அசுர பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியது. ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் துணை முதல்வராகினா்.
முந்தைய ஆட்சியில் முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கும் தற்போதைய முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸுக்கும் கருத்து மோதல் நிலவுவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.