மீண்டும் போர்! காஸா குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்; 59 பாலஸ்தீனியர்கள் பலி!

10 hours ago
ARTICLE AD BOX

காஸாவில் ஏராளமான வீடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 58 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மூன்று மருத்துவனைகளிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை நள்ளிரவில் ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த பெரியவர்கள், குழந்தைகள் என 58 பேர் மரணமடைந்ததாகவும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்தப்பட்ட தாக்குதலின்மூலம், அங்கு கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் அமலில் இருந்த போா் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது.

இதையும் படிக்க.. கடற்கரை - செங்கல்பட்டு ஏசி ரயில்: வெளியானது உத்தேச அட்டவணை

இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேலிய இராணுவம் காஸா நகரம் உள்பட வடக்கு காஸாவில் முந்தைய போரின் போது கைப்பற்றியிருந்த பகுதிகளை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

தொடர்ந்து, வடக்குப் பகுதிக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முக்கிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அங்கே குடியிருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, கடலோரப் பாதையில் தெற்கே செல்லும் பாதை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவித்தது.

அண்மையில்தான், இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆளாகி, சேதமடைந்து இருந்த தங்களது வீடுகளுக்கு காஸா மக்கள் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் இஸ்ரேல் படைகள் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியிருப்பது மக்களை சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.

கடந்த செவ்வாயன்று, கான் யூனிஸ், ராஃபா உள்ளிட்ட தெற்கு நகரங்கள், காஸா சிட்டி போன்ற வடக்கு நகரங்கள், டேய் அல்-பாலா போன்ற மத்திய நகரங்கள் என காஸா முனை முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 560க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மீண்டும் முகாம்களுக்கு

போர் நிறுத்தம் என்னவானது?

காஸாவில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் அமலில் இருந்த ஆறு வார கால போா் நிறுத்தத்தில் ஹமாஸ் பிடியில் இருந்த 33 பிணைக் கைதிகளும், இஸ்ரேல் சிறையில் இருந்த சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டனா். எனினும், அந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதில் இழுபறி நீடித்துவந்தது.

முதலில் மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத் திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் பிடிவாதமாகக் கூறிவந்ததும், அதற்கு ஹமாஸ் படையினா் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்ததும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், காஸாவில் சிறிய அளவிலான தாக்குதலை நடத்திவந்த இஸ்ரேல் ராணுவம், தற்போது முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருவதால் போா் நிறுத்தம் இனியும் நீட்டிக்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.

ஏன் இந்தப் போர்?

கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்து, பலரையு பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றது. இதையடுத்தே, ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது.

காஸா சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 17 மாதங்களுக்கும் மேலாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் பலியாகியுள்ளனா்; சுமாா் 1 லட்சம் போ் காயமடைந்துள்ளனா்.

Read Entire Article