ARTICLE AD BOX
சென்னை,
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. கடந்த மாதம் (பிப்ரவரி) 11-ந் தேதி தங்கம் விலை முதன் முறையாக பவுனுக்கு ரூ.64 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது.
இதற்கிடையே கடந்த மாதம் 28-ந்தேதி தங்கம் விலை ரூ.64 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.63 ஆயிரத்து 680 ஆக இருந்தது. பின்னர், மார்ச் 1-ந்தேதி கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் குறைந்து ரூ.63 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.
அதன்பிறகு தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கம் விலை சரிந்த நிலையில், நேற்று முன் தினம் விலை உயர்ந்து மீண்டும் 64 ஆயிரத்தை தாண்டியது. நேற்று கிராமுக்கு ரூ. 55 உயர்ந்து 8,065 ரூபாயாக விற்பனையானது. ஒரு பவுன் ரூ. 440 உயர்ந்து 64,520 ரூபாயாக விற்பனையானது.
தங்கம் விலை மீண்டும் ஏறத்தொடங்கிய அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. இதன் படி, சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் பவுன் ரூ. 64 ஆயிரத்து 160 க்கும், ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 020க்கும் விற்பனை செய்யப்படுகிறது.