ARTICLE AD BOX
மியான்மர் - தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள சட்டவிரோத பிராந்தியமான மியாவாடியில், ஆயுதம் ஏந்திய போராளிக் குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் சைபர் மோசடி நடவடிக்கைகளில் கிட்டதட்ட 2 ஆயிரம் இந்தியர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
போலி வேலைவாய்ப்புகளால் ஈர்க்கப்பட்ட இந்த நபர்கள் இந்தியா மற்றும் அமெரிக்காவை குறிவைத்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட நிர்பந்திக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மீட்கப்பட்டாலும், பலர் தாங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை பற்றி இன்னும் முழுமையாக அறிந்திருக்கவில்லை என தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்திய குடிமக்களை வெளியேற்ற தூதரக அதிகாரிகள் பணியாற்றி வரும் வேளையில், இந்த மோசடிகளில் விருப்பத்துடன் பங்கேற்பவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும் மாறாக குற்றவாளிகள் எனவும் தூதரகம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் தாய்லாந்தில் வரும் எந்தவொரு வேலைவாய்ப்புகளையும் சரிபார்க்குமாறு இந்தியர்களை தூதரகம் வலியுறுத்தியுள்ளது. ஏனெனில், இந்த மோசடிகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டவர்கள் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளது.
அறிக்கை ஒன்றின்படி, ஜூலை 2022 முதல் மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் தாய்லாந்து முழுவதும் இதுபோன்ற மோசடி மையங்களிலிருந்து 600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் உள்ள மியாவாடி பகுதி, கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கே போய் இந்தியர்கள் சிக்கிக் கொள்கின்றனர் எனக் கூறப்படுகிறது.