தமிழ்நாடு, செழிப்பான பாரம்பரியம், கோயில்களின் சிற்ப கலையழகு, இயற்கையின் மெய் மறக்கும் எழில் ஆகியவற்றால் இந்தியாவின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்குகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மார்ச் மாதத்தில் இதமான சூழல் நிலவும், பல பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி, குளிரும், பகலில் சுட்டெரிக்கும் வெயிலும் இருக்கும். இந்த வித்தியாசமான தட்பவெப்ப நிலையில் அனுபவிக்க மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான 10 சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஊட்டி
நீலகிரி மலைக்கு முத்து போல் அமைந்தது ஊட்டி. பசுமை சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், குளிர்ந்த வானிலை, ஏரி ஆகியவற்றிற்கு பிரபலமானது. மலை ரயில், தொட்டபெட்டா சிகரம், லேக் மற்றும் ரோஜா தோட்டம் போன்றவை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கும் அம்சமாகும். மார்ச் மாதத்தில் அதிகாலையில் புல்வெளிகள் மேல் வெள்ளை போர்வை போர்த்தியது போல் காணப்படும் உறைபனியின் அழகை காண முடியும்.
கொடைக்கானல்
'பூக்களின் இராஜதானி' என அழைக்கப்படும் கொடைக்கானல், மூடுபனி நிறைந்த பள்ளத்தாக்குகள், கோக்கர்ஸ் வாக், தூண் பாறைகள், மூங்கில் காடுகள், சுறுசுறுப்பான நீர்வீழ்ச்சி, தூய்மையான குளிர்காற்று ஆகியவற்றை அனுபவிப்பதே தனி சுகம் தான். இதை 'தென்னிந்தியாவின் ஸ்விட்சர்லாந்து' என சொல்லலாம்.
மகாபலிபுரம் (மாமல்லபுரம்)
மகாபலிபுரம், சென்னை அருகே உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாகும். இது பல்லவர் காலத்திலிருந்து சிற்பக்கலையின் மையமாக விளங்குகிறது. யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக வைக்கப்பட்டுள்ள இந்த நகரம், பஞ்ச ரதங்கள் பல்லவர் சிற்பக்கலை அற்புதங்கள், அர்ஜுனனின் தவம் , உலகிலேயே மிகப் பெரிய ஒரே கற்பாறையில் செதுக்கப்பட்ட சிற்பம், கடலோர அழகுடன் பிரகாசிக்கும் பிரமாண்டமான கடற்கரை கோயில், கிருஷ்ணரின் வெண்ணை கல், இங்கே உள்ள கடற்கரை, சிற்பக் கலை, மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
ராமேஸ்வரம்
புனித ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்த குளங்களில் நீராடுவதால் பாவங்கள் தீரும் என நம்பப்படுகிறது. மேலும், பம்பன் பாலம் வழியாக பயணிப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். தனுஷ்கோடி, ராமர் பாதம், விவேகானந்தர் நினைவு மண்டபம், தீவுகள், படகு சவாரி என இங்கு சுற்றி பார்த்து மகிழ ஏராளமான இடங்கள் உள்ளன. கடல் உணவுகளையும் ருசித்து மகிழலாம்.

குமரி
மூன்று கடல்கள் சங்கமம் ஆகும் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்த பாறையில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை கண்டு மகிழலாம். திருவள்ளுவர் சிலை, திரிவேணி சங்கமம் ஆகியவற்றால் சுற்றுலா ஆர்வலர்களுக்கு சுவாரஸ்யமான இடமாக உள்ளது. கன்னியாகுமரியை சுற்றி ஏராளமான கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் உள்ளன. இயற்கை அழகை முழுவதுமாக ரசிக்க இந்த இடங்களை ஒரு ரவண்ட் வரலாம்.
ஏற்காடு
சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையான சேர்வராயன் மலைகளில் அமைந்துள்ள ஏற்காட்டில் ஏரிகள், தோட்டங்கள் , பகோடா பாயிண்ட், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, பகோடா பாயிண்ட் மற்றும் குளிர்ந்த சூழல் போன்றவை இந்த இடத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பவையாகும்.
சென்னை
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை, கலாச்சாரமும், பாரம்பரியமும், தொழில்துறையும் கலந்த நகரமாக விளங்குகிறது. இந்தியாவின் மிக நீளமான கடற்கரையான மெரினா கடற்கரை, கபாலீஸ்வரர் கோயில், பழமையான திருவல்லிக்கேணி கோயில் போன்றவை ரசிக்க ஒரு அற்புதமான இடம். ஏராளமான பழமையான கோவில்கள், மால்கள், நினைவுச் சின்னங்கள், மியூசியங்கள் என இங்கு பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.

மதுரை
மதுரையின் இதயமாக விளங்கும் மீனாட்சியம்மன் கோயில் கட்டிட கலையின் உச்ச வடிவமாகும். சுமார் 33,000 சிற்பங்களை கொண்டது இந்த கோயில். சிறப்புமிக்க திருமலை நாயக்கர் அரண்மனை மற்றும் இரவு நேர சந்தை போன்றவை பிரசித்தபெற்ற இடங்களாகும். விதவிதமான உணவு வகைகள், கோவில்கள், பார்க்க பார்க்க வியப்பை தரும் இடங்கள் ஏராளமாக உள்ளன.
தஞ்சாவூர்
ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில், அரண்மனை மற்றும் தனித்துவமான பாரம்பரியமான ஓவியங்கள், போன்றவை இந்தியாவின் சிறந்த வரலாற்று சான்றுகளாக உள்ளன. தஞ்சை பெரிய கோவில் என அழைப்படும் பிரகதீஸ்வரர் கோவிலை முழுவதுமாக சுற்றி பார்ப்பதற்கே ஒரு நாள் போதாது. இதோடு இணைந்த பூங்கா, கடைவீதிகள் ஆகியவை சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கக் கூடியவை.
குற்றாலம்
தென்காசியின் முத்து என அழைக்கப்படும் குற்றாலம், அதன் பிரபலமான முக்கிய நீர்வீழ்ச்சிகளால் (பெரிய அருவி, சித்தாறு, ஐந்தருவி, பழைய குற்றாலம், மற்றும் சங்கு தீர்த்தம்) மிகவும் பிரபலமானது. இயற்கையின் கொடை என விளங்கும் குற்றாலம், அதன் மருத்துவ குணம் கொண்ட நீரால் பற்பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet