மாபா.பாண்டியராஜன் பற்றி நான் பேசவில்லை: ராஜேந்திர பாலாஜி திடீர் பல்டி

3 hours ago
ARTICLE AD BOX

கோவை: கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் வளர்ந்தாலும் அதிமுகவை எதிர்க்கின்ற தகுதி திமுகவுக்கும், திமுகவை எதிர்க்கின்ற தகுதி அதிமுகவுக்கும் தான் உண்டு. தமிழக அரசு என்ன நிதி கேட்கிறார்களோ அதை ஒன்றிய அரசு கொடுக்க வேண்டும். அப்போதுதான், நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றார். முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜனை விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, மாபா பாண்டியராஜனை குறிப்பிட்டு நான் பேசவில்லை.

அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. பொதுவான சில பிரச்னைகள் பற்றி தான் பேசினேன். அது முடிந்து போன விஷயம். அதை பற்றி பேச விரும்பவில்லை என்றார்.விருதுநகரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில், பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க வந்த நிர்வாகியை, மேடையிலேயே ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தார். இதைதொடர்ந்து அதிமுகவில் குறுநில மன்னர் போல் ராஜேந்திர பாலாஜி செயல்படுவதாக மாபா பாண்டியராஜன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, உன்னைப்போல கட்சி மாறி வந்தவன் அல்ல, நான் குறுநில மன்னன் தான். என்னைப் பற்றி பேசினால் தொலைத்துவிடுவேன் என்று ராஜேந்திர பாலாஜி கடுமையாக பேசினார். இதுபற்றி எடப்பாடி வீட்டுக்கு சென்று பாண்டியராஜன் புகார் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் ‘‘தனிப்பட்ட பிரச்னையை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது’’ என எடப்பாடி எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்தே ராஜேந்திர பாலாஜி திடீரென பல்டி அடித்துள்ளார்.

The post மாபா.பாண்டியராஜன் பற்றி நான் பேசவில்லை: ராஜேந்திர பாலாஜி திடீர் பல்டி appeared first on Dinakaran.

Read Entire Article