ARTICLE AD BOX
இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்போம். மாநில மொழிகள் அனைத்தையும் வெறுப்போம் என்பதே பா.ஜ.க.வின் மறைமுக மொழிக் கொள்கை. இதனை நேரடியாகத் தோலுரித்துக் காட்டிய மாநிலம் தமிழ்நாடு எனக் கூறி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், கட்சியினருக்கு எழுதிய இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் எனக்கூறி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது;
மாநில மொழிகளை வளர்ப்பதற்கும், பரவச் செய்வதற்கும்தான் தேசிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழித் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம் என்று பா.ஜ.க. அரசு சொல்வது பச்சைப் பொய் என்பதை பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், பத்தாம் வகுப்புக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான வரைவு வெளியிடப்பட்டபோது அதில் மாநில மொழிகள் பலவும் விடுபட்டிருந்தன. இது குறித்து பஞ்சாப் மாநில கல்வித்துறை அமைச்சரிடமிருந்து எதிர்ப்புக் குரல் வெளியான பிறகே, சி.பி.எஸ்.இ. வரைவுப் பட்டியல் முழுமையானதல்ல என்றும், எந்த மாநிலத்தின் மொழியையும் எடுக்கவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்போம். மாநில மொழிகள் அனைத்தையும் வெறுப்போம் என்பதே பா.ஜ.க.வின் மறைமுக மொழிக் கொள்கை. இதனை நேரடியாகத் தோலுரித்துக் காட்டிய மாநிலம் தமிழ்நாடு.
எந்த வகைப் பாடத்திட்டத்தைப் பின்பற்றக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி என்பது முக்கியமானது. அதனை இன்று பஞ்சாப்பும், தெலுங்கானாவும் உணர்ந்து உத்தரவிட்டிருப்பதை, இருபது ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குப் பார்வையுடன், "தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு மொழிப் பாடமாகக் கற்றுத் தரப்பட வேண்டும்" என சட்டமாக நிறைவேற்றியவர் கருணாநிதி.
தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக இருந்தாலும், வேறு வகை பாடத்திட்டங்களைக் கொண்டுள்ள பள்ளிகளாக இருந்தாலும் தமிழ் மொழியைக் கற்றே ஆக வேண்டும் என்ற நிலையை கருணாநிதி அரசு உருவாக்கியதால்தான், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வரைவை வெளியிட்ட சி.பி.எஸ்.இ., அதில் பிற மாநில மொழிகளைத் தவிர்த்திருந்தபோதும் தமிழைத் தவிர்க்க முடியாத நிலை உருவானது. தமிழ்நாடு வகுத்த பாதையில் மற்ற மாநிலங்களும் தங்கள் தாய்மொழியைக் கட்டாயமாக்கும் உத்தரவை வெளியிட்டு வருகின்றன." என்று கூறியுள்ளார்.