ARTICLE AD BOX
Published : 16 Mar 2025 01:40 AM
Last Updated : 16 Mar 2025 01:40 AM
மாநில அரசுகளின் சுயசார்பு தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அண்மைக் காலமாக அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்றான கூட்டாட்சித்தத்துவம் பாதிக்கப்படும் சூழலில் நிதி, கல்வி போன்ற பல விசயங்களில் மாநில அரசுகளின் சுயசார்புத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு ஏற்பு விழா மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மெட்ராஸ் பார் அசோசியேஷன் 160-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் எம்.பாஸ்கர் வரவேற்றார். மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா மெட்ராஸ் பார் அசோசியேஷனின் 160 ஆண்டு கால பயணம் குறித்து எடுத்துரைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமை வகித்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோர்முன்னிலை வகித்து பேசினர். நிறைவாக விழா மலரை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவில் தலைசிறந்த பாரம்பரியம் கொண்டது சென்னை உயர் நீதிமன்றம். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதிலும் முற்போக்கான சமூக வளர்ச்சியை நோக்கி நடைபோடுவதிலும் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானது. சமூக நீதி, தனி மனித உரிமைகளை பாதுகாப்பதில் வழக்கறிஞர்கள் சங்கங்களும் முதன்மை அமைப்பாக
விளங்கி வருகின்றன. ஜனநாயகத்தை செதுக்குவதிலும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதியரசர்களின்பங்களிப்பு பாராட்டத்தக்கது.
இந்தியாவில் வெவ்வேறு மதம், இனம் மற்றும் பண்பாட்டு நடைமுறைகள் இருந்தாலும், நமது அரசமைப்புச் சட்டம், அதன் மாறுபட்ட அணுகுமுறை காரணமாக உயிர்ப்புடன் இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராக உறுதியான தூண்களாக நிற்கும் சுதந்திரமான நீதித்துறை, சிறந்த நீதிபதிகள், வழக்கறிஞர்களுடைய பங்களிப்பே இந்த உயிர்ப்புக்கு காரணம். ஆனால் அண்மைக் காலமாக அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்றான கூட்டாட்சித் தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. நிதி, கல்வி போன்ற பல விசயங்களில் மாநில அரசுகளின் சுயசார்புத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் ஆளுமையை உறுதி செய்வதில், மாநிலங்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
அரசமைப்புச் சட்டம் என்பது வழக்கறிஞர்களின் கையில் இருக்கும் ஒரு ஆவணம்தானே எனக் கருதக்கூடாது. அது நமது வாழ்க்கைப் பயணத்தில், நமது வாழ்வின் தரத்தையே மேல்நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு வாகனம். அது எப்போதும் இந்த மண்ணின் ஆன்மாவாக விளங்குகிறது என்ற அம்பேத்கரின் கூற்றை உணர்ந்து அதுபோல வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும். இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் நீதித் துறையின் உட்கட்டமைப்புக்கும், வழக்கறிஞர்களின் நலனுக்கும், சட்டக்கல்விக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்தால், தென்மாநில மக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் மிகுந்த பயனுடையதாக இருக்கும். இவ்வாறு பேசினார்.
விழாவில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கே.பராசரனுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார். அதேபோல் கே.கே.வேணுகோபாலுக்கு அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனிடமிருந்து அந்த விருதை பெற்றுக் கொண்டார்.
விழாவில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சேகர்பாபு, எம்.பி.க்கள் பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ, ஆர்.கிரிராஜன், மாநிலஅரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா பங்கேற்றனர். பார் அசோசியேஷன் செயலாளர் திருவேங்கடம் நன்றி கூறினார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ஆன்லைனில் உழவர் சந்தை; பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.841 கோடி: தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
- பச்சையா? காவியா? ஜாமியா மசூதிக்கு எந்த வண்ணம் பூசுவது? - உ.பி. சம்பல் பகுதியில் புதிய மோதல்
- “அதீத வன்முறை; ‘மார்கோ’ படத்தை பார்க்க முடியவில்லை”: நடிகர் கிரண் அப்பாவரம் கருத்து
- ‘பராசக்தி’ கூட்டணியில் இணைந்த பேசில் ஜோசப்!