மலைக்கிராமங்களில் மனித- விலங்குகள் மோதல் அதிகரிப்பு: விவசாயிகள் அச்சம்

22 hours ago
ARTICLE AD BOX

வருசநாடு: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அடிவார பகுதிகளில் காட்டு யானை, காட்டு மாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனி மாட்டத்தில் தேவாரம், பண்ணைபுரம், போடி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கடமலைக்குண்டு ஒன்றியம், வருசநாடு, தேவாரம், பண்ணைபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது காட்டு யானை, காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. அவை விவசாய நிலங்களில் புகுந்து காய்கறிகளையும் அங்கு பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் காட்டு மாடு, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அங்கு பணிபுரியும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களையும் தாக்கி விடுகிறது.

இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன் தினம் இரவு, கோவில்பாறை கண்மாய் பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய அடுத்தடுத்த தோட்டங்களில் விவசாயம் செய்து வந்த வருசநாடு அருகே தங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (45) மற்றும் தர்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா(55) ஆகிய இருவரையும் கரடி தாக்கி கொன்ற தாக கூறப்படிகிறது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதேபோன்று மலையடிவாரப் பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தாலும், விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் சில விவசாயிகள் மலை விவசாயம் செய்தாலும் அதனை கடைசி வரை விலங்குகளிடமிருந்து காப்பது சவாலாகவே உள்ளது.

இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், மலையடிவாரப் பகுதிகளில் சுற்றித்திரியும் கரடி, காட்டுப்பன்றி, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், பகல்நேரத்திலேயே கரடிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. குறிப்பாக, ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கரடி, சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகளிடம் இருந்து தப்பித்து செல்வதே பெரும்பாடாக உள்ளது. மேலும் மாலை 6 மணிக்கு மேல் மலைக்கிராமத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்வதில்லை. இதன் காரணமாக வீடுகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, கடலை எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட சிரமமாக உள்ளது. எனவே, வனத்துறையினர் வனவிலங்குகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post மலைக்கிராமங்களில் மனித- விலங்குகள் மோதல் அதிகரிப்பு: விவசாயிகள் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article