ARTICLE AD BOX
பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் யுஸ்வேந்திர சாஹல். ஐபிஎல் தொடர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரை, பஞ்சாப் அணி சமீபத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தில் ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இந்த நிலையில், சாஹலுக்கும் அவருடைய மனைவியும் மருத்துவர் மற்றும் நடன இயக்குநருமான தனஸ்ரீக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் 'தனஸ்ரீ சாஹல்' என்ற பெயருடன் தனஸ்ரீ தனது சமூக வலைத்தள கணக்கை நிர்வகித்து வந்த நிலையில், பின்னர் கணவரின் பெயரை நீக்கி மீண்டும் 'தனஸ்ரீ வர்மா' என மாற்றினார்.
இதனால் சாஹல் - தனஸ்ரீ வர்மா ஆகியோரின் திருமண வாழ்வு குறித்து பலரும் சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்பினர்.
இந்த நிலையில், யுஸ்வேந்திர சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் பிரிந்துவிட்டதாகவும், இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்ற இறுதி விசாரணையின்போது, தம்பதியினர் 45 நிமிடங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது, இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோருவதாக நீதிபதியிடம் தெரிவித்தனர். இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு, கடந்த 18 மாதங்களாக தாங்கள் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், தம்பதியினர் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவருக்கும் நீதிபதி விவாகரத்து வழங்கினார். இருவரும் சட்டப்பூர்வ விவாகரத்து நடவடிக்கைகளைப் பெற்ற பிறகு, அதுதொடர்பான செய்தியை தங்களது தளங்களில் பதிவிட்டனர்.
இதுதொடர்பாக சாஹல், “நான் நம்ப முடியாத அளவுக்குக் கடவுள் என்னைப் பாதுகாத்துள்ளார். எனவே, எனக்குத் தெரியாத அளவுக்கு நான் மீட்கப்பட்ட நேரங்களை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
தனஸ்ரீ வர்மாவோ, “கடவுள் நம் கவலைகளையும் சோதனைகளையும் எப்படி ஆசீர்வாதங்களாக மாற்ற முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா? இன்று நீங்கள் எதையாவது பற்றி மன அழுத்தத்தில் இருந்தால், உங்களுக்கு ஒரு தேர்வு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். கடவுள் உங்கள் நன்மைக்காக எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் சக்தி இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, சாஹல் - தனஸ்ரீ வர்மா தம்பதி இடையே நிலவி வந்த விவாகரத்து பற்றிய செய்திகளுக்கு அவர்களே முடிவு கட்டியுள்ளனர். சாஹலுக்கும் தனஸ்ரீக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.