உக்ரைன்-ரஷ்ய போரில், அமெரிக்கா உக்ரைனுக்கு உதவி வந்த நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நட்புறவு பாராட்டி வருவதால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

உக்ரைனுக்கு உதவிய அமெரிக்கா எதிராக திரும்பியது எப்படி.?

நேட்டோவுடன் உக்ரைன் இணைய விரும்பியதால், ரஷ்யாவின் கோபத்திற்கு ஆளாகியதையடுத்து, கடந்த 2022 பிப்ரவரி முதல், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில், உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா, ராணுவ உதவிகள் மற்றும் ஏராளமான நிதியுதவிகளை வழங்கி வந்தது. மறுபுறம், ரஷ்யாவிற்கு கடும் பொருளாதார தடைகளை விதித்தது.

ஆனால், உன்ரைனின் கெட்ட நேரம், அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று அதிபரானார். அதன்பின் காட்சிகள் மாறின. உக்ரைன் அதிபரை கடுமையாக சாட ஆரம்பித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த போரே தேவையற்றது எனவும், இது ஒரு முடிவில்லாத போர் எனவும் கூறினார். அதோடு, இனியும் உக்ரைனுக்கு உதவ முடியாது என்று கூறியதோடு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் வசைபாட ஆரம்பித்தார்.

அதோடு நிறுத்தாமல், உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நிறுத்தத்தை கொண்டுவர, அமெரிக்கா தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, அது ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது.

நெருக்கமாகும் அமெரிக்கா-ரஷ்யா

மறுபுறம், ரஷ்யாவுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளார் ட்ரம்ப். அதற்கேற்றவாறு, புதினும் தற்போது அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் வகையில் நடந்துகொள்கிறார். அதற்கு எடுத்துக்காட்டாக நேற்று(24.02.25) சில விஷயங்கள் நடந்துள்ளன. அதில் ஒன்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்து ஒன்றிற்கு ஆதரவாக புதின் குரல் கொடுத்திருப்பது. அதாவது, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை, ராணுவ பட்ஜெட்டை பாதியாக குறைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு யோசனையை தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதரவாக பேசியுள்ள ரஷ்ய அதிபர் புதின், டொனால்ட் ட்ரம்ப்பின் யோசனை சரியானதுதான், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

ஐ.நா-வில் ரஷ்யாவுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா

இதேபோல், ஐ.நா-வில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில், வழக்கத்திற்கு மாறாக, அனைவரும் வியக்கும் வகையில், ரஷ்யாவிற்கு ஆதரவாக நின்றுள்ளது அமெரிக்கா. அதாவது, உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டிக்கும் வகையிலும், உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகள் உடனடியாக விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி உக்ரைன் தீர்மானம் கொண்டுவந்தது. இதற்கு, நியாயமாக ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து, உக்ரைனுக்குதான் அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து, வாக்களிப்பிலிருந்து விலகியது. இதனால், ரஷ்யாவுடன் அமெரிக்கா நெருக்கமாகி வருவது தெரியவந்துள்ளது. இது, ஐரோப்பிய நாடுகளுடனான அமெரிக்காவின் நட்புறவை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஏற்கனவே ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி என வசைபாடிய ட்ரம்ப், தற்போது ரஷ்யாவிற்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்திருப்பதால், வரும் நாட்களில் ஜெலன்ஸ்கிக்கு பெரும் சிக்கல்கல் காத்திருக்கின்றன என்பதை தெளிவாக காட்டுகிறது. இதை ஜெலன்ஸ்கி எப்படி எதிர்கொள்கிறார் என பார்க்கலாம்.