ARTICLE AD BOX
மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற 'லைக்கா' நாய் எவ்வாறு இறந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இட்டிகலா பவானி
- பதவி, பிபிசி தெலுங்கு
- 4 நிமிடங்களுக்கு முன்னர்
சோவியத் ஒன்றியம் 1957-ஆம் ஆண்டு பூமியில் இருந்து முதல் உயிரினத்தை புவியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. இந்த முதல் 'விண்வெளி நட்சத்திரம்' மாஸ்கோவின் தெருக்களைச் சேர்ந்த லைக்கா எனும் பெண் நாய்.
ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் தனியாக விண்வெளிக்குச் சென்றது லைக்கா. இதற்கு முன்பு எந்த மனிதனும் செல்லாத இடத்திற்குச் சென்று, மனித விண்வெளிப் பயணம் தொடங்குவதற்கு வழி வகுத்தது.
அது பனிப் போர் உச்சத்தில் இருந்த காலம். நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் முதன்முதலில் சந்திரனில் கால் பதிப்பதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் விலங்குகளை விண்வெளிக்கு அனுப்பின.
அமெரிக்கர்கள் குரங்குகள் மற்றும் சிம்பன்சிகளை பரிசோதனை செய்த போது, ரஷ்யர்கள் நாய்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தனர். ஏனென்றால் அவற்றுக்கு பயிற்சி அளிப்பது எளிது.
நாய்கள், மனிதர்களைப் போலவே பிணைப்புகளைக் கொண்டவை, எளிதில் அணுகக்கூடியவை. ரஷ்யர்கள் விண்வெளிக்கு அனுப்பவதற்காக பெண் நாய்களையும் தெரு நாய்களையும் தேர்ந்தெடுத்தனர்.
ஏனென்றால் அவை பிறப்பிலிருந்தே உயிர்வாழ்வதற்காகப் போராடுபவை. எனவே விண்வெளி ஆய்வுக்கு அவை மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என ரஷ்ய விஞ்ஞானிகள் நம்பினர். அவை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, விண்வெளி உடைகளுக்கு பழக்கப்படுத்தப்பட்டன.
அக்டோபர் 4, 1957 அன்று ஸ்புட்னிக் 1 வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு, அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் அதிபர் நிகிட்டா குருசேவ் ஒரு மாதத்திற்குள் ஒரு நாயை விண்வெளிக்கு அனுப்ப வேண்டுமென உத்தரவிட்டார்.
குருசேவின் உத்தரவுக்குப் பிறகு விண்கலத்தை குறித்த நேரத்திற்குள் தயார் செய்யும் அவசரத்தில், அதில் அனுப்பப்படவிருந்த லைக்காவை எப்படி உயிருடன் பூமிக்கு திரும்பக் கொண்டு வருவது என்று யாரும் யோசிக்கவில்லை. நவம்பர் 3, 1957 அன்று, சிறிய ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது லைக்கா.
லைக்காவை விண்கலத்தில் செலுத்திய பொறியாளர்கள், அவளைக் கடைசியாகப் பார்த்ததும் அப்போதுதான்.

பட மூலாதாரம், Getty Images
'லைக்கா சுறுசுறுப்பானவள்'
லைக்காவின் எடை சுமார் 6 கிலோ. விண்வெளிப் பயணத்திற்குத் தயாராவதற்கு முன்பு, லைக்கா மாஸ்கோவின் தெருக்களில் வசித்துவந்தாள்.
பேராசிரியர் விக்டர் யாஸ்தோவ்ஸ்கி பிபிசிக்கு அளித்த பேட்டியில், தான் குழந்தையாக இருந்த போது லைக்காவுடன் விளையாட விரும்பியதாகக் கூறியிருந்தார். பேராசிரியர் விக்டரின் தந்தை, லைக்காவுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட போது அங்கு மருத்துவ அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
"லைக்காவை ஆய்வகச் சூழலிலிருந்து சிறிது காலம் வெளியே அழைத்துச் செல்ல என் தந்தை விரும்பினார். நாங்கள் அவளை வீட்டிற்கு அழைத்து வந்து, அவளுடன் விளையாடுவோம். லைக்கா மிகவும் சுறுசுறுப்பாக இருந்தாள். அவள் மிகவும் புத்திசாலி, பயிற்சி அளிப்பது எளிது என்று எல்லோரும் சொன்னார்கள்," என்று பேராசிரியர் விக்டர் விளக்கியிருந்தார்.
லைக்கா விண்வெளியில் இறந்த பிறகு, அவளது நினைவாக சிறப்பு தபால் ஸ்டாம்புகள் மற்றும் கவர்கள் வெளியிடப்பட்டன. அந்தக் காலத்தில் லைக்கா என்ற பெயர் கொண்ட சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் தீப்பெட்டிகளும் கிடைத்தன.
உலகின் மிகவும் பிரபலமான நாயான லைக்காவுக்கு மற்றொரு பெயர் இருந்தது. குட்ரியாவ்கா (ரஷ்ய மொழியில் Curly- சுருள் சுருளான என்று அர்த்தம்) என்பது தான் அவளுடைய உண்மையான பெயர். ஆனால் பின்னர் அது லைக்கா என மாற்றப்பட்டதாக, நாசா வலைத்தளம் கூறுகிறது.
இறுக்கமான விண்வெளி உடையில் லைக்கா

பட மூலாதாரம், Getty Images
பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்த இரண்டாவது விண்கலம் ஸ்புட்னிக் 2 ஆகும். ஒரு உயிரினத்தை விண்வெளிக்கு சுமந்து சென்ற முதல் விண்கலமும் அதுவே. நாசா கூற்றுப்படி, ஸ்புட்னிக் 2 கூம்பு வடிவத்தில், 4 மீட்டர் உயரமும், அடிப்பகுதியில் 2 மீட்டர் விட்டமும் கொண்டு, பல பெட்டிகளுடன் வடிவமைக்கப்பட்டது.
இதில் லைக்காவிற்கான ஒரு சிறப்பு கேபின், ரேடியோ டிரான்ஸ்மிட்டர்கள், பூமிக்கு தரவுகளை அனுப்பும் ஒரு டெலிமெட்ரி அமைப்பு, ஒரு வெப்ப கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் லைக்காவைக் கண்காணிக்க ஒரு தொலைக்காட்சி கேமரா போன்ற அறிவியல் உபகரணங்கள் இருந்தன.
இது லைக்கா அமர்ந்திருந்த கேபினிலிருந்து பூமிக்கு வினாடிக்கு 10 ஃபிரேம்களை அனுப்பியது. இருப்பினும், லைக்காவின் கேபின் மிகவும் சிறிதாக இருந்தது. படுக்கவோ நிற்கவோ கூட போதுமான இடம் இல்லை.
விண்வெளி பயணத்தின் போது லைக்காவின் உடல்நிலையைக் கண்காணிக்க, அவளது தோலின் மேல், உடலின் முக்கிய நரம்புடன் இணைக்கப்பட்ட ஒரு டிரான்ஸ்மிட்டர் பொருத்தப்பட்டது. விலா எலும்புகள் மற்றும் கழுத்தில் அதிக டிரான்ஸ்மிட்டர்கள் பொருத்தப்பட்டதாக பேராசிரியர் விக்டர் கூறுகிறார்.
சுவாசிக்க ஆக்ஸிஜனை வழங்க 'காற்று மீளுருவாக்க அமைப்பும்', கழிவுகளை சேகரிக்க ஒரு பையும் பொருத்தப்பட்டது. உணவும் தண்ணீரும் ஜெல்லி வடிவில் வைக்கப்பட்டன.
ஒரு விண்கலத்தில் ஒரு விலங்கை அனுப்புவதன் மூலம், விண்வெளி தொழில்நுட்பப் போட்டியில் சோவியத் ஒன்றியம் அமெரிக்காவை விட ஒருபடி முன்னால் இருப்பதாக அனைவருக்கும் தோன்றியது.
லைக்கா எவ்வாறு இறந்தது?

பட மூலாதாரம், Getty Images
எதிர்பார்த்தபடி ஸ்புட்னிக் 2 வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. நாசா கூற்றுப்படி, ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் சுமார் 10 நாட்களுக்குப் போதுமான ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. இருப்பினும், ஒரு வாரம் கழித்து லைக்கா விண்கலத்தில் வலியின்றி இறந்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட லைக்கா ஒரு தேசிய வீராங்கனையாக மாறியது.
ஆனால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு தான் லைக்காவின் மரணம் தொடர்பான முக்கிய விவரங்கள் வெளியாயின.
லைக்கா விண்வெளியில் ஏழு மணி நேரம் மட்டுமே உயிர் வாழ்ந்ததாகவும், பயம் மற்றும் வெப்பம் காரணமாக இறந்ததாகவும் தெரியவந்தது.
இது குறித்த அறிக்கையை, 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக விண்வெளி மாநாட்டில் மாஸ்கோவின் உயிரியல் பிரச்னைகளுக்கான நிறுவனத்தின் டிமிட்ரி மலாஷென்கோவ் வெளியிட்டார்.
பதிவு செய்யப்பட்ட முதல் டெலிமெட்ரி தகவலின்படி, லைக்கா அதிர்ச்சியில் இருந்தாள். மலாஷென்கோவ் வழங்கிய ஆதாரங்களின்படி, விண்கலம் ஏவப்பட்ட போது லைக்காவின் நாடித்துடிப்பு வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகரித்தது. இது புவியீர்ப்பு விசையின் தாக்கத்திலிருந்து விண்கலம் தப்பித்த பிறகு நடந்தது. இது லைக்கா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததைக் குறிக்கிறது.
டெலிமெட்ரி பதிவுகளின்படி, விண்கலம் ஏவப்பட்டு ஐந்து முதல் ஏழு மணி நேரம் வரை லைக்காவிடமிருந்து எந்த சமிக்ஞையும் பெறப்படவில்லை.
நான்காவது சுற்றின் தொடக்கத்தில், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து வெப்பம் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக லைக்கா உயிரிழந்தாள்.
ஆனால், லைக்கா இரண்டு நாட்கள் உயிர் வாழ்ந்ததாக நாசா தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
- சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வழிவகுத்த 'ஹிட்லரின் விஞ்ஞானி'
- விண்வெளியில் இருக்கும்போது பெண்கள் மாதவிடாயை எப்படி சமாளிக்கிறார்கள்?
- சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் நொறுங்கி விழப் போவது ஏன்? எங்கு விழும்?
- ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?
சுற்றுப்பாதையை அடைந்த பிறகு, ஸ்புட்னிக் 2 இன் கூம்பு வடிவ முன் பகுதி வெற்றிகரமாகப் பிரிந்தது. ஆனால் 'பிளாக் ஏ கோர்' பகுதி திட்டமிட்டபடி பிரிந்து செல்லவில்லை. வெப்பநிலை கட்டுப்பாட்டு அமைப்பும் திட்டமிட்டபடி வேலை செய்யவில்லை. இன்சுலேஷன் அமைப்பும் தளர்ந்தது. கேபினில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டியது.
லைக்கா எப்போது இறந்தாள் என்பது பற்றி இரண்டு வித்தியாசமான கூற்றுகள் இருந்தாலும், ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. ஒரு வாரத்திற்குள்ளாகவே மிகவும் பயந்து, ஹீட்ஸ்ட்ரோக் (Heat stroke) அல்லது வெப்பத்தின் விளைவால் அவள் இறந்தாள் என்பது.
இருப்பினும், ஸ்புட்னிக் 2 விண்வெளி பயணத்தின் போது லைக்காவின் மரணம் என்பது முன்பே கணிக்கப்பட்டது தான். ஏனென்றால், விண்வெளி சுற்றுப்பாதையில் இருந்து ஓர் உயிரினத்தை பூமிக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான தொழில்நுட்பம் அப்போது உருவாக்கப்படவில்லை.
ஸ்புட்னிக் 2 விண்கலம், அடுத்த 5 மாதங்களில் 2,570 முறை பூமியைச் சுற்றி வந்தது. பின்னர் ஏப்ரல் 1958இல் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து எரிந்துபோனது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு