ARTICLE AD BOX
அடலசன்ஸ் - பதின்ம வயது பிள்ளைகளின் உலகைப் பெற்றோர்கள் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று சொல்லும் ஒரு முக்கியமான சீரிஸ்.
“அம்மாவுக்கு நீங்க போடற ஹார்ட் சிம்பல் என்ன கலர்ல இருக்கும்? சிவப்பா? அப்ப அது காதல். மஞ்சள்ன்னா ஒரு மீனிங், நீலம்னா ஒரு மீனிங் இருக்குன்னு உங்களுக்குத் தெரியாதுல்ல. அது தான் இன்ஸ்டா மொழி. அதைத் தெரிஞ்சுக்காம ஸ்கூல்ல பசங்ககிட்ட விசாரணை பண்றப்ப முட்டாளா நிக்காதீங்க!” - இது போலீஸ் அதிகாரியான தனது தந்தைக்கு அந்தப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் அறிவுரை.
"இன்ஸ்டா, ஸ்நாப் சாட் இல்லாம இருந்தா நமக்கு மதிப்பே இல்ல. நாம போஸ்ட் போடனும் அப்படின்னு இல்ல. மத்தவங்களை பாலோ பண்றதுல ஒரு கிளர்ச்சி இருக்கு. ஒரு பையனையோ பொண்ணையோ இத வெச்சே புல்லியிங் பண்ண முடியும். அது உடலளவுல தான் இருக்கணும்னு கிடையாது."
"ஒரு பிரச்சினைக்கு உள்ளானவர்களை விட அந்தப் பிரச்னைக்குக் காரணமானவர்களைக் கொண்டாடும் இந்த மனப்போக்கு மிக மலினமானது. பள்ளிகளுக்கு வரும்பொழுது ஒரு அமைதியை விட, பயம் நமக்கு அதிகம் வந்தால் பிரச்சினை எங்கே இருக்கிறது. மாணவர்களிடமா, ஆசிரியர்களிடமா, பெற்றோர்களிடமா? இதனால் தான் திருமணம் என்ற பந்தத்தில் இருந்தாலும் குழந்தை என்ற ஒரு பொறுப்பு தேவையா என அதிகம் எனக்குத் தோன்றுகிறது."
பதின்ம வயது சிறுவர் சிறுமியரின் வாழ்க்கை எப்படிபட்டது. இது போன்ற சமூக ஊடகங்கள் அவர்கள் வாழ்வில் எப்படியெல்லாம் விளையாடுகின்றன. ஏன் பெற்றவர்கள் தங்கள் மக்களின் சமூக வலைத்தள தொடர்புகளில் கவனமாக இருக்க வேண்டும். இன்று இல்லையென்றாலும் எதிர்காலத்தில் இந்தியாவிலும் ஏன் தமிழகத்திலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்கலாம். நடந்து கொண்டே இருக்கலாம். அவை நம் கவனத்திற்கு வருகின்றனவா என்பது தான் ஒரு பெரிய கேள்வி.
நெட்ப்ளிக்சில் வெளியாகி இன்று பரபரப்பாகப் பேசப்படும் ஒரு தொடர் தான் அடோலோசென்ஸ் (Adoloscence). நான்கே நான்கு எபிசோட்கள் கொண்ட மினி சீரிசாக வந்திருக்கும் இது எழுப்பியிருக்கும் கேள்விகள் அப்படி.
அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பதிமூன்று வயது சிறுவன் ஜேமியை (ஓவன் கூப்பர்) தன்னுடன் படிக்கும் மாணவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டி கைது செய்து கொண்டு போகிறது காவல்துறை. ப்ளம்பிங் வேலை செய்து வரும் அவனது தந்தைக்கு (ஸ்டீபென் கிரகாம்) ஒன்றும் புரியவில்லை. அவனுக்குத் தேவையான சட்ட உதவியும், சைக்கலாஜிஸ்ட் ஒருவரும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. உண்மையில் அந்தச் சிறுவன் கொலை செய்தானா? நடந்தது என்ன? இந்தக் குடும்பத்திற்கு இறுதியில் என்ன ஆகிறது? இது தான் கதை.
நான்கே எபிசோட்கள். ஒரு மணிநேரம் வரை ஓடக்கூடியவை. குறைந்த பட்சக் கேரக்டர்கள். மிக மெதுவாக நகரும் காட்சிகள். ஆனால், நம்மைக் கட்டிப் போடுவது மேக்கிங்கில் இவர்கள் செய்திருக்கும் மேஜிக். ஆம். அனைத்தும் சிங்கிள் ஷாட் எபிசோட்கள். அசுரத்தனமான உழைப்பும், திட்டமிடலும் ரிகர்சல்களும் இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. சிங்கிள் ஷாட்கள் என்றே நமக்குச் சில நிமிடங்களில் மறந்து விடுகிறது. அந்த அளவு பிரம்மாதப் படுத்தியிருக்கிறார்கள்.
அதிலும் இரண்டாவது எபிசோடில் பள்ளியில் நடக்கும் காட்சிகளை இவர்கள் எடுத்திருக்கும் விதம் சபாஷ். அவ்வளவு மாணவர்கள், ஸ்டேடியம், வகுப்பறைகள், சாலைகள் எனக் காமிரா புகுந்து புறப்பட்டிருக்கிறது. அதில் ஒரு சிறுவன் தப்பியோட அவனை அதிகாரி விரட்டிப் பிடிக்கும் காட்சியும் அந்த எபிசோடின் முடிவில் வரும் கிரேன் ஷாட்டும் அடேங்கப்பா!! 'இது தாண்டா மேக்கிங்' எனக் கைத்தட்ட வைக்கிறது.
இரண்டு நபர்கள் மட்டுமே பங்கு பெரும் மூன்றாவது எபிசோடில் ஜேமி என்ற அந்தச் சிறுவனும், மிஷா என்ற சைக்காலஜிஸ்டும் மட்டுமே. சிரிப்பு, அழுகை, கோபம், ரௌத்திரம், வெறியென மாறிமாறித் தனது உடல்மொழியில் வெளிப்படுத்தி ஐயோடா என்று சொல்ல வைத்துவிடுகிறான் அந்தச் சிறுவன். பெண்களின் உடல் பாகங்களை டீன் ஏஜ் பருவத்தினர் பார்க்கும், விவரிக்கும் விவரங்கள் நிறைந்த உரையாடல்கள் வயது வந்தவர்களுக்கே ஆனதாக இருந்தாலும் மிக அவசியமானது. முகத்தின் மிக அருகே வந்து கர்ர்ரென்று அவன் உறுமும்பொழுது அதிர்வது அந்த மருத்துவர் மட்டுமல்ல. அனைத்தும் முடிந்த பின் அந்த மருத்துவர் உடைந்து அழும்போது அவரும் மனிதர் தானே. அவருக்கும் உணர்ச்சிகள் இருக்கும் தானே என்று நம்மால் உணரமுடிகிறது. நான்கில் இது முக்கியத்துவமும் சுவாரசியமும் நிறைந்த ஒரு பகுதி.
கைது, குற்றம் ஏன் நடந்தது, விசாரணையெனக் கழியும் இந்தத் தொடரின் கடைசியில், ஒரு குற்றம் நடந்ததால் அதில் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன? அவர்களைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? ஊரின் ஒட்டுமொத்தக் கவனக்குவிப்பும் எப்படி இவர்கள்மேல் விழுகிறது? இவர்களால் மறுபடி ஒரு இயல்பான வாழ்க்கையை எதிர்கொள்ள முடியுமா? எனப் பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது.
தந்தையாக வரும் ஸ்டீவன் கிரஹாம் இதை இணைந்து எழுதி உருவாக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல். இவரது மனைவியாக வரும் கிறிஸ்டின் யதார்த்தம். தனது கணவரின் கோபத்தைப் புரிந்து கொண்டு ஆதரவாக இருப்பது, நான் உங்களிடம் சரியாக அன்பு காட்டத் தவறிவிட்டேனா என்று புலம்பும் அவருக்கு ஆறுதல் சொல்வது, மகளைச் சரியானபடி வழிநடத்த வேண்டுமே என்று பதறுவது, எனக் கச்சிதம்.
எல்லாம் முடிந்து கடைசிக் காட்சியில், 'என்னை மன்னித்து விடு. உனக்கு இன்னும் நான் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருக்க வேண்டும்' என்று மகனின் படுக்கையில் முகம் புதைத்து அழும்போது, உலகின் ஒட்டு மொத்த தந்தைகளின் இன்னொரு வடிவாகத்தான் தோன்றுகிறார் ஸ்டீவன் கிரஹாம்.
பிள்ளைகள் கேட்கிறார்கள் என அவர்கள் விரும்பும் அனைத்து பொருள்களையும் வாங்கிக் கொடுப்பதோடு பெற்றவர்களின் பொறுப்பு முடிவதில்லை. அவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவர்களுடன் சரியான அளவு சரியான நேரம் செலவழிப்பதும் எத்தனை அவசியமானது! இன்றைய தலைமுறையின் மொழியோடும், நினைவுகளோடும், எண்ணங்களோடும் இணைந்திருப்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனாலும் அதைச் சார்ந்து சிறிதளவேனும் தெளிவு இருப்பது நல்லது. அத்தியாவசியமும் கூட. இதை மிகத்தெளிவாகச் சொல்லியுள்ள 'அடலசன்ஸ்' பெற்றோர்கள் மட்டுமல்ல இளைய தலைமுறையினரும் தவற விடக்கூடாத ஒரு சீரிஸ் தான்.