ARTICLE AD BOX
”கவலை, மனச்சோர்வு முதலியவற்றினின்றும் நீங்குவதற்கு சிறந்த சாதனம் யாதெனில் தீர்மானத்துடன் கிளம்பிச் சென்று பிறருடைய மனக்கவலையைப் போக்கி உற்சாகப்படுத்துவதே"
-அரினால்டு பென்னட்
மனச்சோர்வு உடல் வலிமையிழக்கச் செய்யும். உற்சாகத்தைத் தடுத்து நிறுத்தும். மகிழ்ச்சியை கொண்டாட தடையாக இருக்கும். நம்பிக்கையை இழக்கச் செய்யும். செயலாற்றுகின்ற, நமது உணர்ச்சி வேகத்தை நிறுத்திவிடும். சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய உடல் உறுப்புகளுக்கு நோயைக் கொடுக்கும். மொத்தத்தில் நம்மை செயல் இழக்கச் செய்யவல்ல கொடிய தீமைகளுள் சோர்வும் ஒன்று.
இழப்புகள் வருகின்றபோது மனமுறிவு அடைகின்றபோது, நம்பிக்கை தகர்ந்து விடுகின்றபோது தனிமைப்பட்டு ஒதுக்கப்படுகின்றபோது உலகத்திலிருந்து உறவுவரை எதிர்பார்த்ததில் ஏமாற்றம் அடைகின்றபோது சோகப்புயல் நம்மைத் தாக்கி நிலை இழக்கச் செய்கிறது.
எந்தவித இழப்பு வந்தாலும் வரவேற்று ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். இழப்பை வேண்டுமென்றே மறைக்காதீர்கள். சோகத்தை நம்ப மறுப்பதும் பூசி மெழுகுவதும் தற்காலிக நிவாரணமாக இருக்கலாம். -நிரந்தரமல்ல. உங்களை அறியாமலேயே மெல்ல மெல்ல அழித்துவிடும் புற்றுநோய் அவை.
எதிர்கொண்டு - எதிர்நீச்சல் போட்டால் - நடந்தது நடந்து விட்டது - நடப்பதாவது இனி நல்லவையாக இருக்கட்டும் என்று பக்குவப்படுத்திக் கொண்டால் சோர்வு சோம்பல் முறிந்து ஒழிந்து போகும்.
ஒப்புக்கொள்ளுகின்ற பக்குவம் வந்தபிறகு, நீங்கள் எதையும் ஏற்றுக் கொள்கின்ற சுதந்திரக்கலை உங்கள் வசமாகிவிடும்.
நம்மில் பெரும்பாலோர் தெரிந்தோ, தெரியாமலோ -பிறரை குறை கூறுவதும் விமர்சிப்பதும் - கேலிக்கையாகப் பேசுவதும் - குறைகளை சுட்டிக்காட்டி கிளிப்பிள்ளைபோல் இழித்தும், பழித்தும் பேசுவதையுமே வாடிக்கையாகக்கொண்ட வாதநோய்காரர்களாக - சிலந்திபோல் சிக்கலை தந்து கொண்டே உள்ளவர்களாகவே இருக்கின்றனர்.
இந்தத் திண்ணைப் பேச்சு குறும்புக்காரர்களின் சொல் அம்பு எத்தனை வெள்ளை மனத்தைத் தைத்து சிகப்பாக்கியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் இவர்களுக்கு மன்னிப்பு கிடைக்காது
இருந்தாலும் வசைபாடாதீர்கள் வெறுப்பைக் காட்டாதீர்கள் - இது போன்ற துரதிர்ஷ்டத்தை ஏற்றுக்கொள்கின்றபோது, உங்களுக்குள் மிகப் பெரிய ஆன்ம பலம் உருவாகிறது.
இத்தகைய ஆன்ம பலம் பெற்றுவிட்டால் யாரையும் வெறுக்க மாட்டீர்கள். சாபம் கொடுக்க மாட்டீர்கள். மனநிறைவு, மன அமைதி - எந்த ஆர்ப்பாட்டத்திலும்-அவசரத்திலும் - ஆர்ப்பரிப்பிலேயும் நிலைகுலையாது அமைதி காத்து நிற்ப்பீர்கள்.
''அதை அப்படியே பெற்றுக்கொள்ளுங்கள். நிகழ்ந்து விட்டதை ஏற்றுக் கொள்வதின் மூலமாகத்தான் அதன் விளைவுகளை வெற்றிகொள்ள முடியும்" என்பான் ஜேம்ஸ் வில்லியம் என்ற தத்துவஞானி.
"வாழ்க்கைப் பயணத்தில், தவிர்க்க முடியாமல் நடந்து போனதை ஏற்றுக்கொள்வது முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தது" என்பான் ஷோன்பனேர் என்ற மனநல மருத்துவன்.
இப்போது நமது மனம் ஆன்மீக நிலைக்கு பக்குவமாக கணிந்து நிற்கிறது. நம்மால் சுலபமாக முன்னேற முடியும்.
ஒப்புக்கொள்ளுதல் - ஏற்றுக்கொள்ளுதல் இரண்டும், நாம் அனுசரித்துப்போவதற்கு தயார்நிலையைத் தந்து விடுகின்றது.
ஆகவே சோர்வை சொந்தமாக்காமல் சொல்லாமல் கொள்ளாமல் விரட்டி விடுங்கள்.