ARTICLE AD BOX
மத்திய பட்ஜெட் தாக்கலின்போது நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த புடவைக்கும் (மதுபானி கலையையும், பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரிதேவியின் திறமையை போற்றும் வகையிலும், அவரால் தயாரிக்கப்பட்ட புடவையை அணிந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்). பீகார் மாநிலத்திற்கும் தொடர்பு உள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளன்று, நிர்மலா சீதாராமனின் தோற்றம் அதிகமாக கவனம் பெறும். ஏனெனில் அவர் தேர்ந்தெடுத்து அணிந்து வரும் புடவைகள் ஒவ்வொன்றும், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியின் பாரம்பரியம், நேர்த்தி மற்றும் அடையாளத்தின் தனித்துவமான கலவையை பிரதிபலிக்கும். இதுவரை இவர் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அணிந்து வந்த புடவைகள் அனைத்தும், பெரும்பாலும் ஆழமான கலாசார முக்கியத்துவத்தை கொண்ட புடவைகளாக இருந்தன. மேலும் இவர் இந்திய கைவினைத்திறன் மற்றும் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதை உணர்த்தும் வகையில், இப்படியான புடவைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து அணிந்து வருகிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டின் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, பாரம்பரிய கைவினைத் திறனை வெளிப்படுத்தும் மதுபானி கலையின் புடவையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்தார். இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் மதுபானி கலை, பழங்கால கலை வடிவமாகும். இந்து கடவுள்கள், தெய்வங்கள், புராண காட்சிகள், ஓவியங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. பீகாரில் உள்ள மதுபானிக்கு நிர்மலா சீதாராமன் சென்றபோது, பிரபல மதுபானி கலைஞர் துலாரி தேவியை சந்தித்து மதுபானி கலையை பற்றிய எண்ணங்களை பரிமாறிக் கொண்டுள்ளார். அப்போது இந்த BANGLORI SILK புடவையை 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவி, நிர்மலா சீதாராமனுக்கு வழங்கியுள்ளார். மேலும் அதனை பட்ஜெட் தினத்திற்கு அணியுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். துலாரி தேவி கேட்டுக்கொண்டபடியே, மதுபானி கலைக்கு மரியாதை அளிக்கும் விதமாக, அவர் பரிசளித்த சேலையை அணிந்து, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.