ARTICLE AD BOX
மதுரை மாவட்டம், திருமங்கலம் ஜவஹர் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார். ஒரு சாப்ட்வேர் பொறியாளரான இவர் கிழவநேரியில் 3.18 ஏக்கர் நிலம் வாங்கினார். இந்த நிலத்தை பதிவு செய்ய திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகம் சார் பதிவாளர் (பொறுப்பு) பாண்டியராஜனை அணுகினார். ஆனால், நிலத்தின் மூலப்பத்திரம் காணாமல் போனதாக தேனி தென்கரை ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதன் உண்மை தன்மை குறித்து விசாரணை செய்யாமல், நிலப் பதிவு செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. செந்தில்குமார் லஞ்சம் வழங்க மறுத்தபோதிலும், "ரூ.1 லட்சம் வழங்கினால் மட்டுமே பதிவு செய்யலாம்" என பதிவாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பேச்சுவார்த்தையில், இந்த தொகை ரூ.70 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதனை பத்திர எழுத்தர் பாலமணிகண்டனின் வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறினார்.
செந்தில்குமார் இதனை செலுத்தியதை அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, சார் பதிவாளர் பாண்டியராஜன் மற்றும் பாலமணிகண்டனை கைது செய்தனர்.