ARTICLE AD BOX
மதுரை,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள ஆறுகால் மண்டபத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார்.
திருவிழாவின் முத்தாய்ப்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) முருகப்பெருமான் தெய்வானைக்கு மங்கல நாண் சூடும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மனும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு புறப்பட்டு வருகிறார்கள்.
இதேசமயம் திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு பசுமலை மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு வருதல் நிகழ்வு நடக்கிறது. இதனையடுத்து மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் பகல் 1 மணி அளவில் முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன்கோவில் திருக்கல்யாணத்தை ஒட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை இன்று (செவ்வாய் கிழமை) சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆடி வீதி மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தில் வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழாவை ஒட்டி இன்று திருக்கல்யாணம் நடைபெறுவதை ஒட்டி, திருக்கல்யாணத்தில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் சுவாமிகள் பங்கேற்பதால் கோவில் நடை அடைக்கப்படுகிறது.