ARTICLE AD BOX
பிலாய்: மதுபான ஊழல் வழக்கின் பணமோசடி விவகாரம் தொடர்பாக சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் அவரது மகன் வீடுகளில் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது. சட்டீஸ்கரில் மதுபான கொள்கை விவகாரத்தில் சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சட்டவிரோத பணபரிமாற்றம் காரணமாக அரசுக்கு ரூ.2100 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த வழக்கில் கடந்த ஜனவரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கவாசி லக்மா, காங்கிரஸ் தலைவர் ஐஜாஸ் தேபரின் மூத்த சகோதரர் அன்வர் தேபர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனில் துதேூா, ஐடிஎஸ் அதிகாரி அருண்பதி திரிபாதி உள்ளிட்ட பலரை அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பிலாய் பகுதியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பாகேலின் வீட்டில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். பூபேஷ் பாகேல் மற்றும் அவரது மகன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாயில் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகலின் நெருங்கிய கூட்டாளியான லஷ்மி நாராயணன் பன்சால் என்கிற பப்பு பன்சால் மற்றும் மேலும் சிலரது வீடுகளிலும் பணமோசடி தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மாநிலம் முழுவதும் சுமார் 14-15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
* காங். எம்எல்ஏக்கள் போராட்டம்
சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆளும் பாஜவுக்கு எதிராக முழக்கமிட்டனர். கேள்வி நேரத்தின்போது எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் அவையை விட்டு வெளியேறும்படி சபாநாயகர் உத்தரவிட்டார்.
* காங்கிரசுக்கு எதிரான சதி
காங்கிரஸ் ஊடகம் மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன்கேரா வீடியோ அறிக்கையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல பிரச்னைகளுக்காக அரசிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முயற்சிகின்றது. வரி விதிப்பு, வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம், வாக்காளர் பட்டியல் மோசடி போன்ற, அனைத்து பிரச்னைகளில் இருந்தும் திசை திருப்புவதற்காக பாஜ, பூகேஷ் பாேகல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையை கையில் எடுத்துள்ளது.நாங்கள் பயப்படவில்லை. பயப்படவும் மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மதுபான ஊழல் முறைகேடு சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் வீடுகளில் ஈடி சோதனை appeared first on Dinakaran.