ARTICLE AD BOX
அந்த வரிசையில் தற்போது புதியதாக வெளிவந்திருக்கும் `Buddy' என்கிற சுயாதீன ஆல்பமும் மக்களின் லைக்ஸைப் பெற்றிருக்கிறது. திண்டுக்கல் பகுதியிலிருக்கும் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியின் முன்னாள் இணை சேர்மேனான லக்ஷமன பிரபு (எ) Buddy தமிழ் சினிமா வட்டாரத்துக்கும் மிகவும் நெருக்கமானவர். தோனி, மணி ரத்னம் உள்பட பல நட்சத்திரங்களின் நட்பு வட்டத்திலும் அவர் இருந்தார்.
இதையெல்லாம் தாண்டி மணி ரத்னம் இயக்கிய `ஓ காதல் கண்மணி' திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இவர் கடந்த 2015-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரைக் கொண்டாடும் வகையில்தான் தற்போது இந்த `Buddy' என்கிற சுயாதீன ஆல்பத்தை தயார் செய்திருக்கிறார்கள். இதனை லக்ஷ்மன பிரபுவின் மனைவியான தீபா லக்ஷமன பிரபு தயாரித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணிப்புரிந்த சத்தியசீலன் இதன் வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். `ஜவான்' திரைப்படத்தின் `ஹையோடா' என்ற பாடலின் மூலம் கவனம் ஈர்த்த ப்ரியாமல்லி இசையமைத்து இப்பாடலைப் பாடியிருக்கிறார். `கனா' தர்ஷனும், `தியா' குஷி ரவியும் இப்பாடலின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் பாடல் குறித்தும், மறைவுக்குப் பிறகும் தமிழ் சினிமாவின் முக்கியப் பிரபலங்கள் மனதில் நிலத்திருக்கும் Buddy குறித்தும் தெரிந்துக் கொள்வதற்கு இப்பாடலை இயக்கியிருக்கும் சத்தியசீலனிடம் பேசினோம். அவர், `` நான் லோகேஷ் அண்ணன்கிட்ட வேலை பார்த்து முடிச்சதும் படம் பண்றதுக்கான வேலைகள்ல இருந்தேன். அப்போ Buddy சாரோட கல்லூரிக்கு நான் போயிருந்தேன். அந்த நேரத்துலதான் அவரோட மனைவி தீபா பிரபா மேம் இந்த மாதிரி Buddy- சாருக்காக ஒரு பாடல் பண்ணலாம்னு ஒரு ஐடியாவைச் சொன்னாங்க. அப்படிதான் இந்தப் பாடலோட பயணம் தொடங்குச்சு. தீபா பிரபா மேம் தயாரிப்பாளராக இருந்து இசையமைப்பாளரை தேர்வு பண்ணினாங்க.
நடிகர்களுக்கான தேர்வு நடக்கும்போது Buddy சாருக்காக பல நடிகர்களும் நடிக்கிறதுக்கு முன் வந்தாங்க. பிறகு, நாங்க தர்ஷனை தேர்வு செஞ்சோம். Buddy சார் தமிழ் சினிமா வட்டத்துக்கு ரொம்பவே நெருக்கமானவர். சினிமாவுல இருக்கிற பலருக்கும் பல உதவிகளை அவர் பண்ணியிருக்கார். இந்தப் பாடலுக்கான வேலைகளை கவனிக்கும்போது பல ஹீரோக்களும் `Buddy- காக இந்தப் பாடலை நான் பண்ணுறேன். அவர்தான் என்னுடைய திருமணத்தை நடத்தி வச்சாரு. அவருடைய உதவிக்கு நன்றிக் கடன் செலுத்துற மாதிரி இந்த விஷயத்தை நான் பண்றேன்'னு சொன்னாங்க. அவர் மறைந்து 10 ஆண்டுகள் ஆகப்போகுது. ஆனா, இன்னைக்கும் பலரோட நெஞ்சங்கள்ல அவர் இருக்காரு.

யாருக்கு என்ன உதவினாலும் உடனடியாக பண்ணக்கூடியவர் அவர். முக்கியமாக, மணி ரத்னம் சாருக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர்ல ஒருத்தர் Buddy! அவரை ` ஓ காதல் கண்மணி' படத்துலையும் மணி சார் நடிக்க வச்சிருந்தாரு. இப்போ இந்தப் பாடலுக்காக அவரே பேசி ஒரு காணொளியையும் கொடுத்திருக்காரு. அதே போல தோனி, சுரேஷ் ரெய்னா, அஜித் சார்னு பல நட்சத்திரங்களுக்கும் அவர் ரொம்ப நெருக்கம். சொல்லப்போனால், தோனியும் அவரும் சேர்ந்து ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி தொடங்க வேண்டியதாக இருந்தது. ஆனால், அவருடைய மறைவுக்குப் பிறகு அந்த விஷயம் நடக்கல. இப்படியானவரை கொண்டாடும் வகையிலதான் இந்தப் பாடலை நாங்க உருவாக்கியிருக்கோம்." என்றார்.
Rajini Kanth: ரஜினி திருமண நாளில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு; வேலூர் ரசிகர் மன்றத்தினர் உற்சாகம்