ARTICLE AD BOX
குடும்பத்தினர், நெருங்கிய நட்பு வட்டம், உறவினர் என சிலரிடம் மட்டும் தன் தனிப்பட்ட சொந்த விஷயங்களைப் பற்றி ஒருவர் பகிர்ந்து கொள்ளலாம். வாழ்வில் முன்னேற விரும்பும் மனிதர்கள் இந்த 7 விஷயங்களை வெளியில் சொல்லக்கூடாது, அவை என்ன என்பதையும், அதற்கான காரணங்கள் பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. துயரங்கள், கஷ்டங்கள்
இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் துயரங்களும் கஷ்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை எப்படி, எங்கே பகிர்ந்து கொள்வது என்பதைப் பற்றிய புரிதல் வேண்டும். எல்லோரிடமும் அவற்றை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. உண்மையான நட்பும் உறவும் மட்டுமே அவற்றைக் காது கொடுத்துக் கேட்டு அதற்கான தீர்வுகளைத் தரும். முடிந்தால் உதவியும் செய்யும். ஆனால் மூன்றாம் மனிதர்கள் அப்படியல்ல, அவற்றைக் கேட்டு சிலர் மகிழ்ச்சியடையக்கூடும்.
2. பிறரைப் பற்றிய தவறான கருத்துகள்;
பிறரைப் பற்றிய தவறான கருத்துகள் மற்றும் அவரைப் பற்றி புகார்களை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. அது தேவையில்லாத சங்கடங்களுக்கு ஆளாக்கிவிடும். மேலும் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் மூன்றாம் நபர் அதை வேறொரு விதமாக திரித்துக் கூறலாம். இதனால் உங்களைப் பற்றிய தவறான அபிப்பிராயம் பிறருடைய மனதில் எழும் வாய்ப்புகள் உள்ளது.
3. தன் குறைகளை வெளிச்சம் போட்டு காட்டுதல்;
தன்னுடைய குறைகளை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு மேடையில் பேசுவது பயமாக இருந்தால் 'எனக்கு மேடைப்பேச்சு என்றாலே அச்சமாக இருக்கிறது. மேடையில் ஏறுவதென்றாலே, உள்ளங்கைகள் எல்லாம் வியர்த்து கைகால்கள் எல்லாம் நடுங்கும் " என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. மிக நெருங்கிய நண்பர்களிடம் சொல்லலாம். அதை விடுத்து பொதுவில் சொன்னால் அவர்கள் தேவை இல்லாமல் கமெண்ட்களை அளிக்கக்கூடும்.
4. பொருளாதார நிலமை;
யாருமே தன் பொருளாதார நிலைமையைப் பற்றி பொது வெளியில் பேசக்கூடாது. இது ஒரு மிக சென்சட்டிவ் ஆன விஷயமாகும். அதிக பணம் இருக்கிறது அல்லது பணத்திற்கு கஷ்டப்படுகிறோம் என்று சொல்வது சிக்கலையே உருவாக்கும். இரண்டையுமே வெளியில் சொல்லும்போது அது ஒரு வகையான அவஸ்தையை உருவாக்கி விடும். நல்ல உறவுகளை நட்பை இழக்கும் சூழல் உண்டாக்கக்கூடும்.
பணம் இருக்கிறது என்ற காரணத்திற்காக தேவையில்லாமல் கடன் பிறர் உங்களிடம் கடன் கேட்கலாம். அல்லது பணம் இல்லை, நம்மைப் பணம் கேட்டு தொந்திரவு செய்வாரோ என எண்ணி உங்களை விட்டு விலகவும் செய்யலாம்.
5. கடந்த காலக் கசப்புகள்;
கடந்த காலத்தில் நடந்த வருத்தமான விஷயங்கள், அவமானங்கள், வேதனைகள் போன்றவற்றை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. அதை பிறர் காது கொடுத்து பொறுமையாகக் கேட்கப் போவதில்லை. மேலும் சம்மந்தப்பட்ட நபரே இவற்றை மறந்து விட்டு நிகழ்காலத்தில் மட்டுமே கவனம் செலுத்தினால்தான் வாழ்வில் முன்னேற முடியும்.
6. குடும்பப் பிரச்னைகள்;
குடும்ப பிரச்னைகள் என்பவை மிகவும் பிரத்தியேகமான விஷயமாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றியும் வீட்டுப் பிரச்னைகளை பற்றியும் பொதுவில் விவாதிக்கக்கூடாது. அவர்களது ப்ரைவசி பாதிக்கப்படும்.
7. எதிர்காலத் திட்டங்கள்;
தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுவது மிக முக்கியம். அதே சமயம் அவற்றை ரகசியமாக வைத்துக்கொள்வது அதைவிட முக்கியம். பிறரிடம் பகிர்ந்து கொள்ளும்போது "என்ன இன்னும் உன் ப்ளான் வொர்க் அவுட் ஆகலையா?” என அவர்கள் அதைப் பற்றி கேட்டு ஒருவிதமான சங்கடத்தை உண்டாக்கக்கூடும். எனவே இதைத் தவிர்க்கவேண்டும்.