ARTICLE AD BOX
பிரயாக்ராஜ்,
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ந் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமம் அமைந்துள்ள பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள சாதுக்கள், துறவிகள், ஆன்மிக பெரியவர்கள் மற்றும் உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் வந்து குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் பல லட்சம் பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா, முகேஷ் அம்பானி, ஆந்திர பவன் கல்யாண், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு பிரபலங்கள் புனித நீராடியுள்ளனர்.
தற்போது மகா கும்பமேள இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது. இந்தநிலையில், பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் தனது குடும்பத்துடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளார். கும்பமேளாவில் இதுவரை 60 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.