ARTICLE AD BOX
உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு, உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளையுடன் இவ்விழா நிறைவடைய இருக்கிறது. எனினும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து அருகிறது. தற்போது 66 கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது.
இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களால் பிரயாக்ராஜ் நகர் மீண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. கும்பமேளா இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதால், புனிதநீராட பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்து வருகின்றனர். இதனால், பிரயாக்ராஜ் நகரில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், திரிவேணிச் சங்கமத்தில் பக்தர்களும் நீராடி வரும் நிலையில், பெண் ஒருவர் தாம் பயன்படுத்தும் செல்போனையும் நீரில் மூழ்கி எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, உறவினரால் கும்பமேளாவிற்கு வர முடியாத காரணத்தால், பெண் ஒருவர், வீடியோ கால் செய்தபடியே அந்த போனை தண்ணீரில் முக்கி முக்கி எடுக்கிறார். இதனால் வீடியோவில் பேசும் அந்த நபர் திரிவேணி சங்கமத்தில் மூழ்கியதாக நினைத்துக் கொள்ளப்படுகிறார். பெண்ணின் இந்தச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மகா கும்பமேளாவில் ’டிஜிட்டல் நீராடல்’ என்ற பெயரில் புகைப்படங்களை கங்கை நதியில் மூழ்கச் செய்து உள்ளூர் நபர் பணம் சம்பாதித்தது பேசுபொருளானது. அதாவது, பிரயாக்ராஜை சேர்ந்த நபர் ஒருவர், திரிவேணி சங்கமத்திற்கு நேரடியாக வர முடியாதவர்கள் தங்களது புகைப்படங்களை அனுப்பினால், அதை கங்கை நதியில் நீராடச் செய்து மீண்டும் அந்த நபருக்கே அனுப்பிவைத்தார். இதற்கு ஆயிரத்து நூறு ரூபாய் கட்டணமாக அந்த நபர் வசூலித்துள்ளார். இது, சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, அதைவிட இந்தப் பெண் வீடியோ காலில் உறவினரையே திரிவேணி சங்கமத்தில் நீராட வைப்பது பேசுபொருளாகி உள்ளது.