ARTICLE AD BOX
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாகும்.
கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் இந்த புனிதமான காலகட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இணையும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடுவது ஒருவரின் பாவங்களை சுத்தப்படுத்துவதாகவும், ஆன்மீக சக்தியை மேம்படுத்தி, முக்தியை அடைய உதவுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, வழிபாடுகளை நடத்தினார்கள்.
பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்-நடிகைகள், முகேஷ் அம்பானி, கௌதம் அதானி உட்பட பல தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள்.
45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் சுமார் 66 கோடி பேர் புனித நீராடியதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். மகாசிவராத்திரி நாளில் மட்டும் திரிவேணி சங்கமத்தில் 1 கோடியே 32 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாகவும், இதுவரை வேறு எந்த மத நிகழ்ச்சியிலும் பக்தர்கள் இந்த எண்ணிக்கையில் கலந்து கொண்டது இல்லை என்றும் கூறப்படுகிறது.
பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம்தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி சிவராத்திரிக்கான புனித நீராடலுடன் பிப்ரவரி 26-ம்தேதி நிறைவடைந்தது.
பிரயாக்ராஜில் மகாகும்பமேளா நிறைவடைந்த நிலையில் அடுத்த கும்பமேளா எப்போது, எங்கே நடக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த கும்பமேளா மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 2027-ம் ஆண்டு ஜூலை 17-ம்தேதி முதல் ஆகஸ்ட் 17-ம்தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், 2027 நாசிக் கும்பமேளாவில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏற்பாடுகள் செய்ய உள்ளதாக கூறினார்.
நாசிக்கில் இருந்து சுமார் 38 கிமீ தொலைவில் உள்ள திரிம்பகேஷ்வரில் அடுத்த கும்பமேளா நிகழ்வு நடைபெற உள்ளது. நாசிக் இந்தியாவின் இரண்டாவது நீளமான நதியான கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான திரிம்பகேஷ்வர் சிவன் கோவிலும் இங்கு உள்ளது.
குறைந்தது மூன்று வருடங்களுக்கு ஒரு முறையாவது பிரயாக்ராஜ், ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜைன் ஆகிய நான்கு நகரங்களில் கும்பமேளாக்கள் நடத்தப்படுகின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழா கும்பமேளா என்றும், ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா அர்த்த கும்பமேளா என்றும், ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது பூரண கும்பமேளா என்றும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது மகா கும்பமேளா என்றும் அழைக்கப்படுகிறது.