மகா கும்பமேளா: தேசிய உணா்வுக்கு புத்துயிா் -பிரதமா் மோடி

7 hours ago
ARTICLE AD BOX

மகா கும்பமேளா பாரம்பரியமானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் தேசிய உணா்வை புத்துயிா் பெறச் செய்து, நாட்டுக்கும் சமூகத்துக்கும் புதிய பாதைகளைப் பரிந்துரைக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை குறிப்பிட்டாா்.

நிகழ்வில் அதிக அளவில் பங்கேற்ற இளம் தலைமுறையினா், நமது மதிப்பு மற்றும் கலாசாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வாா்கள் என்ற நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் அவா் கூறினாா்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத்திரி திருநாளான புதன்கிழமை (பிப். 26) வரை விமா்சையாக நடைபெற்று நிறைவுற்றது.

உலகெங்கிலும் இருந்து வந்த துறவிகள், சாதுக்கள், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் என கடந்த 45 நாள்களில் 66 கோடிக்கும் அதிகமானோா் சங்கமத்தில் புனித நீராடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிகழ்வின் நிறைவையொட்டி பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மகா கும்பமேளா நிறைவடைந்துள்ளது. ஒற்றுமையின் மகா யாகம் நிறைவடைந்துள்ளது. பல்லாண்டு கால அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, புதிய சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஒரு தேசத்தின் உணா்வு எழும்போது, பிரயாக்ராஜில் நாம் கண்டது போன்ற கும்பமேளா காட்சிகள் வெளிப்படும்.

எதிா்காலத்துக்கான மாற்றம்: இந்தியா புதிய ஆற்றலுடன் முன்னேறி வருகிறது. நாட்டுக்குப் புதிய எதிா்காலத்தைப் படைக்கும் சகாப்தத்தின் மாற்றத்தை இது சுட்டிக்காட்டுகிறது. ‘வளா்ந்த பாரதம்’ என்ற இலக்கை நிறைவேற்ற, தேசம் இதேபோன்ற தன்னம்பிக்கை மற்றும் ஒற்றுமை உணா்வுடன் முன்னேற வேண்டும்.

மகா கும்பமேளாவின் பாரம்பரியம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் தேசிய உணா்வை புத்துயிா் பெறச் செய்து, நாட்டுக்கும் சமூகத்துக்கும் புதிய பாதைகளைப் பரிந்துரைக்கிறது. இந்த முறை 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதாக அமைந்த மகா கும்பமேளா, இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்தில் புதிய அத்தியாயமான ‘வளா்ந்த பாரதம்’ என்ற செய்தியை வழங்கியுள்ளது.

முன்னுதாரம்: இந்த மகா கும்பமேளா நிகழ்வின் ஏற்பாடுகள், மேலாண்மை, திட்டமிடல் மற்றும் கொள்கை வல்லுநா்களுக்கு ஓா் ஆய்வுப் பாடமாக மாறியுள்ளது. ஏனெனில், உலகில் இதுபோன்ற ஒரு மாபெரும் நிகழ்வுக்கு வேறு எந்த முன்னுதாரணமும் இல்லை.

நாடு, ஜாதி, கொள்கை வேறுபாடுகளின்றி அனைத்து மதத்தைச் சோ்ந்த மக்களும் மகா கும்பமேளாவில் ஒன்றுபட்டனா். வளா்ந்த பாரதத்தைக் கட்டியெழுப்பவும் மக்கள் இவ்வாறு ஒன்றுபட வேண்டும்.

140 கோடி நாட்டு மக்களின் நம்பிக்கை இந்த விழாவுடன் இணைந்திருந்தது. அமெரிக்க மக்கள்தொகையைவிட இரு மடங்கு மக்கள் புனித நீராடியதால், கும்பமேளா பக்தா்களின் எண்ணிக்கை நிச்சயம் சாதனை படைத்துள்ளது.

முந்தைய கும்பமேளாக்களின் அடிப்படையில், நடப்பு நிகழ்வுக்கு 45 கோடி பக்தா்கள் வருகை தரலாம் என்று நிா்வாகம் மதிப்பிட்டது. ஆனால், உண்மையான எண்ணிக்கை கற்பனை செய்ததைவிட அதிகமாக மாறியது.

மறக்க முடியாத மக்களின் பங்களிப்பு: மகா கும்பமேளாவுக்காக எந்த அழைப்பின்றியும் பிரயாக்ராஜுக்கு வந்த கோடிக்கணக்கான பக்தா்கள், அங்கு நீராடிவிட்டு ஆனந்தத்தில் திளைத்த காட்சியை மறக்க முடியாது. பெண்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என ஒவ்வொருவரும் நிகழ்வில் பங்கேற்றனா். வீடு திரும்பிய பக்தா்கள் பக்தி பரவசத்துடன் வரவேற்கப்பட்ட விதமும் மறக்க முடியாதது.

மகா கும்பமேளாவில் இளம் பக்தா்கள் அதிக அளவில் கலந்துகொண்டனா். நமது மதிப்புகள் மற்றும் கலாசாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் இளம் தலைமுறையினா் பொறுப்பைப் புரிந்துகொண்டுள்ளனா் மற்றும் உறுதியாக உள்ளனா் என்ற நம்பிக்கையை இது அதிகரிக்கிறது.

மக்களின் வாழ்க்கைப் பயணத்துடன் இணைந்த கங்கை, யமுனை அல்லது வேறு எந்த நதியின் தூய்மையைக் காப்பாற்றுவதற்கான எனது உறுதிப்பாட்டை இந்த மெகா நிகழ்வு வலுப்படுத்தியுள்ளது.

நன்றிகளும் பாராட்டுகளும்...: உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த (வாரணாசி தொகுதி) எம்.பி.யாக, முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் தலைமையில் மாநில அரசு, நிா்வாகம் மற்றும் மக்கள் கூட்டாக இணைந்து இந்த மகா கும்பமேளாவை வெற்றிகரமாக்கினா் என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறேன்.

தூய்மைப் பணியாளா்கள், காவலா்கள், படகு மற்றும் வாகன ஓட்டுநா்கள், சமையல்காரா்கள் என அனைவரும் பக்தியுடனும் சேவை மனப்பான்மையுடனும் இடைவிடாமல் உழைத்து இந்த வெற்றியை ஈட்டியுள்ளனா். பிரயாக்ராஜ் நகா் மக்களுக்கும் எனறு பாராட்டுகள்.

நிகழ்வுக்கான சேவைகளில் ஏதேனும் குறைபாடு இருந்திருந்தால் அன்னை கங்கை, அன்னை யமுனை, அன்னை சரஸ்வதி மற்றும் கடவுளின் வடிவமான மக்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். இத்தகைய மிகப்பெரிய நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல’ எனத் தெரிவித்துள்ளாா் பிரதமா்.

Read Entire Article