ARTICLE AD BOX
உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு, உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் விழா முடிய சில நாட்களே இருக்கும் நிலையில், பக்தர்கள் எண்ணிக்கை தற்போது 56 கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது. இன்னும் 7 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மகா கும்பமேளா குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, பிரயாக்ராஜில் வெவ்வேறு இடங்களில் ஆற்று நீரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்த நீரானது, மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்தது. மேலும், விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரப் பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஆணையிட்டது.
இதை மறுத்த உத்தப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், “பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கும் குடிக்கவும் ஏற்றது. இதுபோன்ற அறிக்கைகள், மகா கும்பமேளாவை அவமதிக்கும் பிரசாரம்” எனத் தெரிவித்த அவர், மகா கும்பமேளாவில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில், ”மகா கும்பமேளாவில் கிரிக்கெட் வீரரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளதா" என சமாஜ்வாதியைச் சேர்ந்த முன்னாள் முதல்வரும், மக்களவை எம்பியுமான அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது, ’மகா கும்பமேளாவில் போதுமான திட்டமிடல் இல்லை’ என எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்துவரும் நிலையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், "கிரிக்கெட் வீரர் முகமது ஷமியும் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் நீராடினார். இதில், எந்த பாகுபாடும் இல்லை" எனப் பதிவிட்டிருந்தார். இது, தற்போது பேசுபொருளாகி உள்ளது. அதாவது, கடந்த ஜனவரி 13ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்குவதற்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு, பிரயாக்ராஜில் உள்ள யமுனை நதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்தான் நீராடினார். ஆனால், முதல்வர் யோகி ஆதித்யநாத், முகமது கைஃப்க்கு பதில், முகமது ஷமி எனத் தெரிவித்திருப்பதுதான் பேசுபொருளாகி உள்ளது.
இதுகுறித்து சமாஜ்வாதியைச் சேர்ந்த முன்னாள் முதல்வரும், மக்களவை எம்பியுமான அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். யோகி ஆதித்யநாத் ஆட்சிக் காலத்தில் அலகாபாத், பைசாபாத் ஆகிய நகரங்கள் மற்றும் அடையாளச் சின்னங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அதைச் சுட்டிக்காட்டி இருக்கும் அகிலேஷ் யாதவ், ”இப்போது, நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரரின் பெயரையும் மாற்றுவீர்களா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இது, இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், விவாதத்தையும் தூண்டியுள்ளது.