ARTICLE AD BOX
1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று( பிப்ரவரி 24) தொடங்கி வைத்திருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், " மக்கள் மீதான பொருளாதார சுமையை குறைக்கவே முதல்வர் மருந்தகங்களை திறக்க திட்டமிட்டோம். சுதந்திர தினத்தன்று நான் அறிவித்த முதல்வர் மருந்தகம் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்கு உதாரணம் தான் இந்த முதல்வர் மருந்தகங்கள். நீரழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். மருந்தகம் அமைக்க தொழில்முனைவோருக்கு ரூ.3 லட்சம் மானியமாக வழங்கப்படும். பி.பார்ம் படித்த 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருகிறது. 38 மாவட்டங்களில் மாவட்ட மருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்கான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையை மாற்ற வேண்டும்.
அவர்களின் சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த மருந்தகங்களைத் திறக்க திட்டமிட்டோம். நீரழிவு போன்ற நோய்களுக்கு அதிக அளவு மருந்துகளை வாங்க வேண்டிய சூழல் உள்ளது. அதற்கு அதிக அளவு செலவுகள் ஏற்படுகிறது என்று மக்கள் கவலைப்படுவதால் இந்த திட்டத்தை செயல்படுத்த நாங்கள் திட்டமிட்டோம்.

சொன்ன மாதிரியே 1000 மருந்தகங்களை திறந்திருக்கிறோம். மக்களுக்கு நன்மை செய்வதில் கணக்கு பார்க்கவில்லை. இந்த மருந்தகங்கள் மேலும் அதிகரிக்கப்படும்" என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
