ARTICLE AD BOX

Image Courtesy: @wplt20
லக்னோ,
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று லக்னோவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தீப்தி ஷர்மா தலைமையிலான உ.பி. வாரியர்ஸ் அணி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மோதியது.
இந்த போட்டிக்கான டாசில் வென்ற மும்பை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. உ.பி. வாரியர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜியா வால் 55 ரன் எடுத்தார்.
மும்பை அணியில் அமெலியா கெர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 151 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 153 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் தனது 4வது வெற்றியை பதிவு செய்தது.
மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 68 ரன்கள் எடுத்தார். உ.பி.வாரியர்ஸ் தரப்பில் கிரேஸ் ஹாரிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார். முன்னதாக இந்த ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மும்பை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாககடைசி ஓவரில் 3 பீல்டர்கள் மட்டுமே உள்வட்டத்திற்கு வெளியே நிற்க (பீல்டிங்) வேண்டும் என நடுவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவரத்தை மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரிடம் நடுவர் தெரிவித்து கொண்டிருந்தார். அப்போது ஹர்மன்ப்ரீத் கவுர் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த சோபி எல்லஸ்டோன் நடுவரிடம், ஹர்மன்ப்ரீத்தை காண்பித்து ஏதோ கூறினார். உடனே இதற்கு பதிலடியாக ஹர்மன்ப்ரீத் கவுர் அவரை பார்த்து ஏதோ திட்டினார்.
இதையடுத்து களநடுவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் களத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், களத்தில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக ஹர்மன்ப்ரீத் கவுருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹர்மன்ப்ரீத் கவுருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதை ஹர்மன்ப்ரீத் கவுரும் ஏற்றுக்கொண்டார்.