ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியை வம்பு இழுத்து இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜுனைத் கான். அவர் வெளியிட்டுள்ள பதிவில், சில அணிகள் திறமையால் வெற்றி பெறுவதாகவும், சில அணிகள் போட்டி அட்டவணையை வைத்து வெற்றி பெறுவதாகவும் இந்திய அணியை சீண்டி இருக்கிறார்.
இது பற்றி ஜுனைத் கான் வெளியிட்டுள்ள பதிவு: "சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணி 7150 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா 3286 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளது. இந்தியா 0 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளது. சில அணிகள் திறமையால் வெற்றி பெற்றுள்ளன, சில அணிகள் போட்டி அட்டவணையால் வெற்றி பெற்றுள்ளன" என்று கூறி இருக்கிறார்.

இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்ததால், தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்பட்டு வருகின்றன. மற்ற அணிகளின் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்றன.
அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி உட்பட இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது இந்திய அணிக்கு கிடைத்த சாதகமான விஷயம் என மற்ற அணிகளை சேர்ந்த பலரும் விமர்சித்து உள்ளனர்.
மேலும், இந்திய அணி துபாயில் ஆடுவதால், மற்ற அணிகள் பலமுறை பாகிஸ்தானுக்கும், துபாய்க்கும் மாற்றி, மாற்றி பயணம் செய்ய வேண்டி இருந்ததாகவும் விமர்சனம் இருந்துள்ளது. இந்த தொடரில் இந்தியாவுடன் விளையாடாத தென்னாப்பிரிக்காவும் பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு பயணம் செய்ததுதான் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.
அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி எந்த அணியுடன் விளையாடுகிறது என்பது உறுதியாகாததால், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா என இரண்டு அணிகளும் ஒரு நாள் முன்பே துபாய்க்கு பயணம் செய்தன. பின்னர் ஆஸ்திரேலியா தான் இந்தியாவுடன் அரையிறுதியில் விளையாடுகிறது என உறுதியானதால், தென்னாப்பிரிக்கா மீண்டும் துபாயில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றது.
"வார்த்தையை அளந்து பேசுங்க.. இந்திய அணி நல்லா ஆடுதுன்னு.." பாகிஸ்தான் ஜாம்பவான் இன்சமாம் பேச்சு
அங்கே அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடிய தென்னாப்பிரிக்கா அணி தோல்வி அடைந்தது. இதை அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு ஓய்வு இல்லாததால் தோல்வி அடைந்ததாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும், நியூசிலாந்து அணி குரூப் சுற்றில் இந்தியாவுடன் ஒருமுறை மோதியது.
பின்னர் தனது அரையிறுதியில் விளையாட வேண்டி பாகிஸ்தான் சென்றது. பின்னர் மீண்டும் பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு வந்து இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. அதனால், இந்த தொடரில் அதிக தூரம் பயணம் செய்த அணியாக நியூசிலாந்து உள்ளது. அதாவது 7150 கிலோமீட்டர் அளவுக்கு நியூசிலாந்து அணி பயணம் மேற்கொண்டுள்ளது.
ஆனால், இந்தியா இதுவரை வேறு எந்த நகரத்துக்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. துபாயில் ஒரே ஹோட்டலில் தங்கி, துபாய் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகிறது இந்திய அணி. இதைத்தான் ஜுனைத் கான் விமர்சித்து இருக்கிறார். எனினும் மற்ற அணிகள் திறமையால் வெல்வதாகவும், இந்தியா அணி திறமையற்ற அணி என்பது போலவும் அவர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.