ARTICLE AD BOX
மும்பை,
3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கியது. இதன் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 10 புள்ளி பெற்றாலும் ரன்-ரேட் அடிப்படையில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. குஜராத் ஜெயண்ட்ஸ் 3வது இடம் பிடித்தது.
உ.பி.வாரியர்ஸ், பெங்களூரு அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. இதில் வெளியேற்றுதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 47 ரன் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை 149 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 66 ரன்கள் எடுத்தார்.
டெல்லி தரப்பில் மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசென் மற்றும் நல்லபுரெட்டி சரணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களம் கண்டது. டெல்லியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெக் லேனிங் மற்றும் ஷபாலி வர்மா களம் இறங்கினர்.
இதில் மெக் லேனிங் 13 ரன், ஷபாலி வர்மா 4 ரன், அடுத்து வந்த ஜெஸ் ஜோனசென் 13 ரன், அன்னபெல் சதர்லேண்ட் 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் மரிசான் கேப் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ஜெமிமா 30 ரன், அடுத்து வந்த சாரா பிரைஸ் 5 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து நிகி பிரசாத் களம் இறங்கினார்.
மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய மரிசான் கேப் 40 ரன்னிலும், அடுத்து வந்த ஷிகா பாண்டே ரன் எடுக்காமலும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகினர். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கைவர் பிரண்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.