ARTICLE AD BOX

image courtesy:twitter/@wplt20
மும்பை,
3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கியது. இதன் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 10 புள்ளி பெற்றாலும் ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நேற்று முன்தினம் இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் 47 ரன் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தி 2-வது அணியாக இறுதிப்போட்டியை எட்டியது.
இதனையடுத்து இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு தொடக்க வீராங்கனைகள் ஆன யாஸ்திகா பாட்டியா 8 ரன்களிலும், ஹேய்லி மேத்யூஸ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அணியை நாட் ஸ்கிவர் பிரண்ட் - ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் ஸ்கிவர் பிரண்ட் 30 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அமெலியா கெர் 2 ரன்களிலும், சஜீவன் சஜானா டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் அடித்து அணி வலுவான நிலையை எட்ட உதவினார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை 149 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி தரப்பில் மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசென் மற்றும் நல்லபுரெட்டி சரணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்க உள்ளது.�