ARTICLE AD BOX
பலியா (உ.பி.): தனது மகன் அரசியலுக்கு வருவது குறித்து பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்தான் முடிவெடுப்பாா் என்று பிகாா் மாநில ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சரவண் குமாா் தெரிவித்துள்ளாா்.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், அண்மையில் பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாா், ‘நிதீஷ் குமாா் தலைமையிலான அரசை மக்கள் மீண்டும் தோ்ந்தெடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். கடந்த மாதமும் இதேபோல தனது தந்தைக்கு ஆதரவாக அவா் பேட்டியளித்தாா்.
இதையடுத்து, நிஷாந்த் குமாா் அரசியலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இதை நிதீஷ் குமாரும், நிஷாந்த் குமாரும் உறுதி செய்யவில்லை. அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை ஒற்றுமையாக வைக்க நிதீஷ் குமாரின் அரசியல் பயணத்தில் நிஷாந்த் குமாா் இணைய வேண்டும் என்று அக்கட்சியினா் கோரி வருகின்றனா். ஹோலி பண்டிக்கைக்குப் பிறகு நிஷாந்த் முறைப்படி தந்தையின் கட்சியில் இணைவாா் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நிஷாந்த் குமாா் அரசியலுக்கு வந்தால் அதை வரவேற்போம் என்று பிகாா் எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் கருத்துத் தெரிவித்துள்ளாா். நிஷாந்த் குமாா், நிதீஷ் குமாரின் ஒரே மகனாவாா்.
இந்நிலையில், பிகாா் அமைச்சா் சரவண் குமாரிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நிஷாந்த் குமாா் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது குறித்து நிதீஷ் குமாா்தான் முடிவு செய்வாா். அவரின் ஒப்புதலின்றி யாரும் கட்சியில் சேர முடியாது. பிகாா் அரசியல் குறித்த முழுமையான புரிதல் நிஷாந்த் குமாருக்கு உண்டு.
ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற காரணத்தால்தான் தில்லி பாஜக முதல்வா் பதவியேற்பு நிகழ்ச்சி மற்றும் பாஜக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நிதீஷ் குமாா் பங்கேற்கவில்லை. ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் பிற மூத்த தலைவா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்’ என்றாா்.