ARTICLE AD BOX
உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் பல்வேறு நோய்களைத் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஏனெனில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மனிதனுக்கு ஏற்படும் நோய்களும் அதிகரித்து வருகின்றன.
பல நோய்களுக்கு அடிப்படைக் காரணமான உடல் பருமன் வராமல் தடுக்க உணவுமுறைகளில் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அவ்வாறு உடல் பருமன் பிரச்னையைத் தவிர்க்க அல்லது வந்தபின்னர் சரிசெய்ய உணவில் எண்ணெய்ப் பயன்பாட்டைக் குறைக்க வலியுறுத்துகின்றனர்.
அதிகப்படியாக உணவில் எண்ணெய் சேர்ப்பது உடல் பருமனுக்கு மட்டுமின்றி இதய நோய், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது என்பதைப் பல ஆய்வுகளும் கூறுகின்றன.
அதனால், உடல் ஆரோக்கியத்திற்கு, நல்ல தரமான எண்ணெய்களைப் பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அல்லது முடிந்தவரை குறைக்கவும் பரிந்துரைக்கின்றனர்.

எவ்வளவு எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும்?
நடுத்தர வயதுடைய ஒருவர், அவரின் வயது, பாலினம், உடல் இயக்கம் ஆகியவற்றைப் பொருத்து ஒரு நாளைக்கு 2 முதல் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம்.
உணவில் எண்ணெய் சேர்க்க வேண்டியதும் அவசியம். ஏனெனில் எண்ணெய்யில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன.
சமையல் எண்ணெய்கள் அனைத்தும் கலோரி மிகுந்தவை. அவை உடலில் அதிக கொழுப்புகளைச் சேர்க்கும். சமையல் எண்ணெய்களில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள், டிரான்ஸ் பேட் எனும் கொழுப்பு அமிலங்கள், இதய நோய், நீரிழிவு நோய் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
அதாவது, உடல் சாதாரணமாக எரிக்கும் கொழுப்புகளைவிட அதிக கொழுப்புகள் சேரும்போது அது உடலில் தங்கிவிடுகிறது. இந்த கொழுப்புகள் ஹார்மோன் சமநிலையைக் குலைத்து உடல் பருமனடையச் செய்கிறது.
இதையும் படிக்க | கர்ப்பிணிகளிடையே அதிகரிக்கும் தைராய்டு! காரணங்கள், சிகிச்சைகள் என்னென்ன?

நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் அதிகமுள்ள பாமாயில், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை உடலில் நல்ல கொழுப்பைக் குறைத்து, கெட்டக் கொழுப்புகளை அதிகரிக்கின்றன. இது இதயத் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தமனிகள் சுருங்கி கடினமாகின்றன. இதற்கு அதிரோஸ்கிளிரோசிஸ் என்று பெயர். இதனால்தான் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுகின்றது.
பகுதியளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்களில் டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன. இது வீக்கம், இன்சுலின் எதிர்ப்பு, டைப்-2 நீரிழிவு போன்றவைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே, இவற்றுக்குப் பதிலாக ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்ற ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். மற்ற எண்ணெய்களை ஒப்பிடுகையில் இவற்றில் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் குறைவாக உள்ளன.
அவோகேடா எண்ணெய், ஆலிவ் எண்ணெய், ஆளி விதை எண்ணெய் ஆகியவற்றில் இதயத்தின் ஆரோக்கியத்துக்கு உதவும் நல்ல கொழுப்புகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. ரத்த சர்க்கரை அளவையும் சரிசெய்கின்றன.

FOOD 4.JPG
எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்துதல்
ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்தும் பழக்கம் நம் மக்களிடையே அதிகம் இருக்கிறது. குறிப்பாக பொரித்த எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்தும்போது அதில் உள்ள வேதிப்பொருள்கள் ரசாயனங்களாக மாறுகின்றன. அவ்வாறு பயன்படுத்தும் எண்ணெய்யில் அக்ரோலின், ஆல்டிஹைடுகள், செல்களைச் சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள்ஸ் உருவாகி கெட்ட கொழுப்புகளை அதிகரிக்கின்றன. இது உடலில் வீக்கம், இன்சுலின் எதிர்ப்பு, இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது.மேலும் இரைப்பையில் கோளாறுகள், நரம்பியல் பிரச்சினைகள், ஏன் புற்றுநோய்க்குக்கூட வழிவகுக்கும்.
இவற்றைத் தவிர்க்க ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
சாலையோரங்களில் விற்கும் பொரித்த உணவுகள்
பொரித்த உணவுகளில் அதிக கலோரி மட்டுமின்றி, கெட்ட கொழுப்பு அமிலங்கள் மற்றும் சோடியமும் அதிமுகமுள்ளது. பொரித்த உணவுகளில் உள்ள அதிகப்படியான எண்ணெய்யினால் உயர் ரத்த அழுத்தம், உடலில் இன்சுலின் எதிர்ப்பு, வீக்கம் ஏற்படும். தொடர்ந்து அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது டைப் 2 நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதயத்தில் கோளாறுகள் ஏற்படும். எனவே, சாலையோரக் கடைகளில் விற்கும் பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்கமுடியாவிட்டாலும் முடிந்தவரை குறைத்துக்கொள்வது நல்லது. சாலையோரக் கடைகளில் பெரும்பாலும். பயன்படுத்திய எண்ணெய்களைத்தான் மீண்டும் பயன்படுத்துகிறார்கள்.
அரசு, குறிப்பிட்ட விதிமுறைகளை உருவாக்கி எண்ணெய் பயன்படுத்துதலுக்கு தரநிலைகளை நிர்ணயித்து அனைத்து உணவகங்களிலும் ஆரோக்கியமான எண்ணெய்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலமாக மக்களிடையே ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் குறையும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும், ஒவ்வொருவரும் தங்கள் உடல் ஆரோக்கியம் கருதி எண்ணெய் எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ளலாம். இது உடல் எடையை சரியாக நிர்வகிப்பதுடன் உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் நோய்களைத் தடுக்க உதவும் என்று கூறுகின்றனர்.
இதையும் படிக்க | ஆன்லைனில் அதிக நேரம் உள்ள குழந்தைகளுக்கு 'மூளைச் செயல்திறன் குறைவு' - அறிகுறிகள், காரணங்கள்?