ARTICLE AD BOX
Mutton Masala Powder : அசைவத்தின் மீது இருக்கும் ஆசை, அதை தயாரிக்க தேவையான மசாலா பொடியை தயாரிப்பதில் இருப்பதில். சுவையான மட்டனுக்கு மசாலா மிக முக்கியம். அந்த மசாலா பொடியை கடையில் வாங்கி தான் பலரும் உபயோகிக்கின்றனர். அதே மசாலாவை நாமே தயாரித்து, நாமே அதை சமைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். அதுவும் இது மாதிரியான ஒரு மட்டன் மசாலாவை நீங்கள் தயார் செய்தால், அக்கம் பக்கத்தினர் எல்லாம், உங்கள் மட்டன் சமையல் வாசம் நுகர்ந்து, உங்களை வட்டமடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சரி, பேச்சை நிறுத்திவிட்டு, மூச்சை இழுக்கும் மட்டன் மசாலாப் பொடியை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
மட்டன் மசாலாப் பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்:
- மல்லி - 100 கிராம்
- சீரகம் - 50 கிராம்
- கருவேப்பிலை - 20 முதல் 30 இலைகள்
- சோம்பு - 50 கிராம்
- மிளகு - 50 கிராம்
- தனி மிளகாய் - 10 முதல் 15
- உப்பு - தேவைக்கு ஏற்ப
மசாலாப் பொடி செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து வாணலி சூடானதும், அதில் மல்லி விதை, சீரகம், சோம்பு, மிளகு, தனி மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை நன்கு சூடாக்கவும். எண்ணெய் இல்லாமல், பக்குவமாக வறுக்கப்படும் அந்த பொருட்களை கருகிவிடாத அளவிற்கு கவனமாக கையாளவும். .
பொன் நிறமாக மாறும் வரை, மசாலாப் பொருட்களை கிண்டிக் கொண்டே இருக்கவும். வாசம் வர, நிறம் மாறியதும், அவற்றுடன் தேவையான அளவு உப்புப் பொடியை சேர்த்து கலக்கவும். இப்போது வாணலியை இறக்கிவிட்டு, சிறிது நேரம் சூடு குறையும் வரை காத்திருிக்கவும். சூடு குறைந்ததும், மிக்ஸியில் அந்த பொருட்களை ஒன்றாக போட்டு அரைக்கவும். நன்கு பொடியாக ஆன பின், மிக்ஸியை அணைத்துவிட்டு, சூடு குறையும் வரை சிறிது நேரம் காத்திருக்கவும். சூட்டோடு டப்பாவில் அடைக்க வேண்டாம். சூடு முற்றிலும் குறைந்த பின், டப்பா அல்லது பாத்திரத்தில் மசாலாப் பொடியை சேமிக்கவும்.
மணமணக்க மசாலாப் பொடி வேண்டும் என நினைப்பவர்கள் கூடுதலாக கொஞ்சம் அரிசி மற்றும் பொரி கடலையை சேர்த்து வறுத்துக் கொள்ளலாம். தேவை என்றால் மட்டும், அதை சேர்த்துக் கொள்ளவும். இப்போது, சுவையை அள்ளித் தரும் மட்டன் மசாலாப் பொடி உங்களுக்கு தயாராக இருக்கும். இனி எந்த மட்டன் மசாலாப் பொடியும் நீங்கள் கடையில் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

டாபிக்ஸ்