ARTICLE AD BOX
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அகரம் கிராமம், எல்லையம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் ராஜசேகர் (35 வயது). இவரது மகள் தமிழ்ச்செல்வி (12 வயது). பள்ளிபாளையம் கிராமத்தில் உள்ள அரசு நிதி பெரும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த தமிழ்ச்செல்வி யாரிடமும் பேசாமல் வீட்டில் உள்ள படுக்கை அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் தமிழ்ச்செல்வி கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவரது தாய் கதவை தட்டினார். உள்ளே இருந்து எந்த சத்தமும் வராததால் பரிதவித்து போன தாய் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.
அப்போது மாணவி தமிழ்ச்செல்வி மின்விசிறியில் தூக்கிட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உயிருக்கு போராடிய தமிழ்ச்செல்வியை மீட்டு தேவம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் மாணவி தமிழ்ச்செல்வி பெற்றோரிடம் செல்போன் கேட்டதாகவும், அதை வாங்கி கொடுக்க பெற்றோர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தியில் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.