ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடனா அல்லது தென்னாப்பிரிக்காவுடனா.. எந்த அணியுடன் மோதும்? என சில நாட்களுக்கு முன்பு வரை விவாதங்கள் நடந்து வந்தன. ஏனெனில், அந்த இரண்டு அணிகளே குரூப் சுற்றில் சிறப்பாக விளையாடி இருந்தன.
நியூசிலாந்து அணி இந்தியாவுடன் குரூப் சுற்றில் தோல்வி அடைந்திருந்ததால் அந்த அணியின் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லை. எப்படியும் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவிடம் அரையிறுதியில் தோல்வி அடைந்து விடும் என்று பலரும் நினைத்தனர். ஆனால், தற்போது நியூசிலாந்து இந்தியாவோடு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மோத உள்ளது.

அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது நியூசிலாந்து. இதை நினைத்து இந்திய ரசிகர்கள் தற்போது கவலை அடைந்துள்ளனர். என்னதான் குரூப் சுற்றில் நியூசிலாந்து அணியை இந்திய அணி எளிதாக வீழ்த்தி இருந்தாலும், இறுதிப்போட்டியில் அந்த அணியுடன் மோதுவது என்பது கத்தி மீது நடப்பது போன்று தான்.
ஏனெனில், நியூசிலாந்து அணி பல சமயம் உலக கிரிக்கெட் தொடர்களில் எதிர்பாராத சமயங்களில் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து இருக்கிறது. எப்போதெல்லாம் நியூசிலாந்தை இந்தியா எளிதாக வீழ்த்தி விடும் என்று நாம் நினைக்கிறோமோ, அப்போதெல்லாம் அந்த அணி இந்தியாவை வீழ்த்தி இருக்கிறது.
குறிப்பாக 2019 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்திருந்தது. அப்போது இந்திய அணி அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்து இருந்தது. முதல் சுற்றில் ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இந்த நிலையில் அரை இறுதியில் யாரும் எதிர்பாராத வகையில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.
அடுத்து 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவே வெற்றி பெறும் என அனைவரும் எண்ணினர். அப்போது இந்திய அணி உலக அளவில் டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்தது. ஆனால் அப்போதும் நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி நியூசிலாந்தை பந்தாடும் என அனைவரும் சாவகாசமாக இருந்தபோது, நியூசிலாந்து அணி அந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவை வீழ்த்தி மாபெரும் வரலாற்று சாதனையை செய்தது.
எப்போதும் எதிர்பாராத சமயங்களில் எல்லாம் நியூசிலாந்து அணி முக்கிய தொடர்களில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்து இருக்கிறது. அதுபோல தற்போது, "குரூப் சுற்றில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்திவிட்டது, எப்படியும் இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்தை இந்திய அணி வீழ்த்தி விடும்" என நாம் நினைத்தால், முந்தைய நிகழ்வுகளைப் போல இப்போதும் நியூசிலாந்து அணி அதிர்ச்சி அளிக்குமோ என்ற கவலை தான் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கு தென்னாப்பிரிக்கா அணியை இறுதிப்போட்டியில் சந்தித்திருக்கலாம், அது எளிதாக இருந்திருக்கும் என தற்போது சில இந்திய ரசிகர்கள் சமூக ஊடகங்களில் புலம்பி வருவதை பார்க்க முடிகிறது. தற்போது நியூசிலாந்து அணியுடன் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு ஒரே ஒரு சாதகம் மட்டுமே உள்ளது. குரூப் சுற்றில் துபாய் மைதானத்தில் தான் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது.
IND vs NZ Final: கோல்டன் பேட் விராட் கோலிக்கு கிடைப்பது அவ்ளோ ஈஸி இல்லை.. 2 வீரர்கள் கடும் போட்டி
தற்போது அதே மைதானத்தில் தான் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அந்த குரூப் சுற்றுப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.