ARTICLE AD BOX
துபாய்: சுமார் 37 ஆண்டுகளாக இந்திய அணியை நியூசிலாந்து அணியின் சாபம் ஒன்று பிடித்து ஆட்டி வருகிறது. சரியாக 1988 இல் இந்திய அணி கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. அப்போது இருந்து 37 ஆண்டுகளாக இதுவரை நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி எந்த ஒரு தொடரின் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றது இல்லை.
இந்த 37 ஆண்டுகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மூன்று தொடர்களின் இறுதிப் போட்டிகளில் சந்தித்து இருக்கின்றன. அந்த மூன்றிலும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் இந்த 37 ஆண்டுகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒரே ஒரு அரை இறுதிப் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. இந்த நிலையில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்துமா? என்று ரசிகர்களும் விமர்சகர்களும் விவாதித்து வருகின்றனர். பல்வேறு புள்ளி விவரங்களையும் வரலாற்றையும், புரட்டிப் போட்டு அலசி ஆராய்ந்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் இந்த 37 ஆண்டு சாபம்.
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 1985இல் "வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் கிரிக்கெட்" என்ற தொடரின் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. அதன் பின் 1988 ஆம் ஆண்டு ஷார்ஜா கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது. அதன் பின்னர் நியூசிலாந்து அணியை இந்திய அணியால் எந்த ஒரு கிரிக்கெட் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வீழ்த்த முடியாமலே இருந்து வந்தது.
2000 ஆவது ஆண்டில் ஐசிசி நாக் அவுட் கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. 2005ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணியுடன் ஆன இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து இந்தியாவை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.
2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த அரை இறுதிப் போட்டிகளில் 2019 ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து, இந்தியாவை வீழ்த்தி இருந்தது.
நீண்ட இடைவெளிக்கு பின் 2023 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் தான் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது. அதாவது 1985 க்கு பிறகு இந்திய அணி முதன்முறையாக நியூசிலாந்து அணியை ஒரு கிரிக்கெட் தொடரின் அரை இறுதியில் வீழ்த்தி இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
இதுவரை 37 ஆண்டுகளாக இந்திய அணியால் நியூசிலாந்தை இறுதிப் போட்டிகளில் வீழ்த்த முடியாமல் இருந்து வருகிறது. அந்த சாபம் தொடருமா? அல்லது இந்திய அணி நியூசிலாந்தை 2023 அரையிறுதியில் வீழ்த்தியதை போலவே இறுதிப் போட்டி சாபத்தையும் முடிவுக்கு கொண்டு வருமா? என்ற கேள்வி உள்ளது.
இதில் நியூசிலாந்து அணிக்கும் ஒரு சோகம் உள்ளது. நியூசிலாந்து அணி எந்த ஒரு இறுதிப் போட்டியிலும் இந்தியாவை தவிர்த்து வேறு எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் அதில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ளது. 2019 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அம்பயர்களின் தவறான முடிவால் நியூசிலாந்து அணி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
2009 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி, 2015 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் 2021 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி ஆகிய மூன்று இறுதிப் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நியூசிலாந்து தோல்வி அடைந்திருந்தது. ஆனால், 2000 ஆவது ஆண்டு ஐசிசி நாக் அவுட் கோப்பை மற்றும் 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்திய அணிக்கு எதிராக இறுதிப் போட்டிகளில் விளையாடிய போது நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது.
IND vs NZ Final: இந்தியாவுக்கு தலைவலி.. முக்கிய பவுலரை இறக்கும் நியூசிலாந்து.. துபாயில் 5 விக்கெட்
அந்த இரண்டு கோப்பைகள் மட்டுமே நியூசிலாந்து அணி வென்ற ஐசிசி கோப்பைகள் ஆகும். ஆக இந்திய அணி நியூசிலாந்துக்கு அதிர்ஷ்டத்தை தரும் ஒரு அணியாக உள்ளது. மறுபுறம் இந்தியாவுக்கு, நியூசிலாந்து துரதிர்ஷ்டத்தை தரும் ஒரு அணியாக உள்ளது. இந்த நிலை 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மாறுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.