பேச்சில் இருக்குதுங்க சூட்சுமும்..!

19 hours ago
ARTICLE AD BOX

ப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது அகம்பாவம், இப்படித்தான் பேசவேண்டும் என்பது அகம்புண்ணியம்.

தனக்குப் பேசக் கற்றுத் தந்த தாயிடமே, வளர்ந்த பிறகு மகன், ‘வாயை மூடு‘ என்கிறான் என்றால், அந்தத் தாய், பண்புடன் பேச அவனுக்குக் கற்றுக் கொடுக்க வில்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது.

இரண்டு பேர் பெருங்குரலெடுத்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அவர்களிடையே ‘யார் சரி?‘ என்ற ஈகோதான் இருக்கிறதே தவிர, ‘எது சரி‘ என்ற பகுத்தறியும் பண்பாடு இல்லை. அருகருகேதானே இருக்கிறார்கள், ஏன் இவர்கள் கத்த வேண்டும்? அதற்கு அவர்களுடைய மனங்கள் ஒன்றுக்கொன்று தொலை தூரத்தில் இருப்பதான் காரணம்.

ஒரு மருத்துவரிடம் நோயாளி போகிறார். அவரைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு, குறிப்பிட்ட சில மாத்திரைகளை எழுதித் தருகிறார் மருத்துவர். அந்த மருந்துச் சீட்டைப் படித்த நோயாளிக்கு சந்தேகம். ‘தனக்கு ஏற்பட்டிருக்கும் உடல் கோளாறை இந்த டாக்டர் சரியாகப் பரிசோதித்துப் பார்த்தாரா, அவர் எழுதிக் கொடுத்திருக்கும் இந்த மருந்துகள் அந்த நோயை குணமாக்குபவைதானா?‘ அவருக்கு மருந்து விலையைப் பற்றி கவலை இல்லை. ஆனால் குணமாகுமா என்ற அவநம்பிக்கை இருந்தது.

ஆகவே மருத்துவரிடம், ‘‘ஏன், டாக்டர், நான் இந்த மருந்துகளை எத்தனை நாள் சாப்பிட வேண்டும்? சாகும் வரையிலா?‘‘ என்று தனக்கு அப்படி ஒரு நோய் வந்துவிட்ட விரக்தியில் கேட்டார்.

மருத்துவர் அவரைப் பார்த்து மெல்லச் சிரித்தார். ‘‘இல்லை, இல்லை. நீங்கள் வாழும்வரை சாப்பிடுங்கள், போதும்,‘‘ என்றார்!

நோயாளியின் முகம் பளிச்சிட்டது. நம்பிக்கை பிறந்தது. ‘நம் உயிரைப் பற்றி நமக்கிருக்கும் அக்கறையைவிட இந்த டாக்டருக்கு அதிகம் இருக்கிறது. ஆகவே இந்த மருந்துகளும் சரியானவையாகத்தான் இருக்கும்!‘

‘தீயினால் சுட்டப் புண் உள்ளாறும், ஆறாதே, நாவினால் சுட்ட வடு‘ என்றாரே திருவள்ளுவர், இவரும் ஒரு மருத்துவர்தான். ஆமாம், ஒருவருக்குத் தீப்புண் ஏற்பட்டது என்றால், சருமத்துக்கு மேலே களிம்பு, எண்ணெய் என்றெல்லாம் தடவலாம். ஆனால் உள்ளுக்கும் எதற்காக மருந்து சாப்பிட வேண்டியிருக்கிறது, தெரியுமா? தீப்புண்ணின் இயல்பே அதுதான். அதாவது அது மேலோட்டமாக ஆறிவிட்டதாகத் தெரியும். ஆனால் ஆழமாக அந்தப் புண் ஆறாமலேயே இருக்கும். அப்படி ‘உள்ளாற்றத்தான்’ இந்த மருந்து.

இதையும் படியுங்கள்:
வாழ்ந்து காட்டுங்கள் வையகம் வாழ்த்தும்!
There's a lot of talk..!

சில சமயங்களில் இந்தத் தீப்புண் உள்ளும், புறமும் ஆறி, புண்பட்ட அடையாளமான தழும்பும்கூட மறைந்துவிடும், ஆனால் நாவினால் சுட்ட வடு மட்டும் எப்போது ஆறாது, மறையாது, நிலைத்து நின்றுவிடும், என்பதுதான் திருவள்ளுவர் என்ற மருத்துவரின் கருத்து.

தினமும் வீட்டிற்கு காய்கறிக் கூடையைச் சுமந்து வருவாள் ஒரு பெண். அவளிடம், தனக்குத் தேவையான காய்களை வீட்டுப் பெண்மணி வாங்கிக் கொள்வாள். ஆனால் இந்தக் காய்கறிக்காரியிடமும் அவள் மனம் நோகாமல் பேசுவாள். எப்படி? ‘‘காய் வேணாம்மா, போ,‘‘ என்று இவள் சொல்ல மாட்டாள். ‘‘காய் இருக்கும்மா, நாளைக்கு வா,‘‘ என்றுதான் சொல்வாள். தன்னிடம் காய் வாங்காததைவிட, தன்னை விரட்டும் வார்த்தைகளால் தன் மனம் நோவில்லை என்று ஆறுதல் அடைகிறாள் காய்கறிக்காரி!

ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகரிஷி சொற் பொழிவாற்றினார். குடும்ப வாழ்க்கையில், விட்டுக்கொடுப்பது, அனுசரித்துப்போவது, பொறுத்துக் கொள்வது ஆகிய முக்கியமான மூன்று பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். அப்போது பார்வையாளர்களிடையே ஒரு பெண் எழுந்து, ‘‘விட்டுக் கொடுத்துப் போவது என்று பொதுவாகச் சொல்கிறீர்கள்; யார் விட்டுக் கொடுத்துப் போகவேண்டும்? கணவனா, மனைவியா?‘‘ என்று கேட்டாள்

அதற்கு மகரிஷி, ‘‘யாரிடம் அன்பு அதிகம் இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்தான் விட்டுக்கொடுத்துப் போவார், அவர்தான் அனுசரித்துச் செல்வார், அவரேதான் பொறுத்துக் கொண்டும் போவார்,‘‘ என்று பதிலளித்தார்.

சில வார்த்தைகள் ரணப்படுத்தும், சில வார்த்தைகள் குணப்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டாலே போதும், பேச்சில் கண்ணியம் கூடும்.

ஏனென்றால் உடலுக்கு இன்சுலின் முக்கியம் என்பதுபோல, இன்சொலின், அது ஒவ்வொருவர் மனசுக்கும் முக்கியம்.

Read Entire Article