ARTICLE AD BOX
சிவகங்கை மாவட்டம், சோமநாதபுரம் காவல் நிலையத்தில், அமராவதிபுதூர் பகுதியைச் சேர்ந்த இளையகௌதமன் (அரசியல் பிரமுகர்) உள்ளிட்ட சிலர் காவல் நிலையத்திற்குள் புகுந்து, தன்மீது தாக்குதல் நடத்தினர் என பெண் எஸ்.ஐ பிரணிதா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
இதுகுறித்து, காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல் நிலையத்திற்குள் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அங்கு பணியாற்றிய காவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், பெண் எஸ்.ஐ பிரணிதா கூறிய குற்றச்சாட்டு தவறானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது என தெரியவந்துள்ளது.
நடந்தது என்ன?
நேற்று முன்தினம் புதன்கிழமை (பிப்.5) அன்று மாலை, அமராவதிபுதூர் கிராமத்தில் கோயில் நிலம் தொடர்பான தகராறு காரணமாக இரு பிரிவினர் சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். இந்த விவகாரத்திற்காக எஸ்.ஐ முத்துகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டு வந்தார்.
அத்துடன், பெண் எஸ்.ஐ பிரணிதா, வாகனச் சோதனை முடித்து காவல் நிலையம் வந்தார். பின்னர், எஸ்.ஐ முத்துகிருஷ்ணன் மேற்கொண்ட விசாரணையில் தலையிட்டு, குற்றச்சாட்டுகள் குறித்து பேசினார். இதனை விசாரணைக்கு வந்திருந்த ஒரு குழுவினர் எதிர்த்தனர். இதனால், பெண் எஸ்.ஐ பிரணிதாவிற்கும், அமராவதிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த இளையகௌதமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், விசாரணைக்காக வந்த பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
மருத்துவ பரிசோதனை
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பெண் எஸ்.ஐ பிரணிதா தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கும் சென்று, 10 பேர் தன்னைத் தாக்கியதாகக் கூறி சிகிச்சை பெற்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், அவரின் உடல்நிலை சீராக உள்ளதால், அவரை உள்நோயாளியாக அனுமதிக்கத் தேவையில்லை என தெரிவித்தார். இருப்பினும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை தொடர விரும்பினார். அதே நேரத்தில், அவரது குடும்பத்தினர் ஊடகங்களுக்கு தகவல் வழங்கியதாக தெரியவந்துள்ளது.
இடமாற்றம்
பெண் எஸ்.ஐ பிரணிதா மீது பொதுமக்கள் சார்பாக முன்பும் புகார்கள் இருந்துள்ளன. இதன் காரணமாக, கடந்த 18 நவம்பர் 2024 அன்று நிர்வாக காரணத்தால் அவர் சோமநாதபுரம் காவல் நிலையத்திலிருந்து சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இருப்பினும், அவர் தனது பணிமாறுதல் செய்யப்பட்ட காவல் நிலையத்தில் பணியில் சேராமல், 30 நவம்பர் 2024 முதல் 16 ஜனவரி 2025 வரை 48 நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். தொடர்ந்து, சோமநாதபுரம் காவல் நிலையத்திலேயே பணிபுரிந்து வந்துள்ளார்.
அதிகாரப்பூர்வ நிலைப்பாடு
பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீது காவல்துறை எப்போதும் முக்கியத்துவம் வழங்குகிறது. இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகளில் எந்தவித உண்மையும் இல்லை. மேலும் அவை மிகைப்படுத்தப்பட்டவை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது என சிவகங்கை மாவட்ட காவல்துறை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
செய்தி: சக்தி சரவணன் - சிவகங்கை.